ஆப்கானித்தானில் இருந்து 2013 இற்குள் படையினரை மீள அழைக்க ஆத்திரேலியா முடிவு

புதன், ஏப்பிரல் 18, 2012

ஆப்கானித்தானில் இருந்து தமது படையினரை 2013 ஆம் ஆண்டுக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவர் என ஆத்திரேலிய அரசு அறிவித்துள்ளது. முன்னர் 2014 ஆம் ஆண்டுக்குள் திரும்ப அழைப்பதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.


ஆத்திரேலியப் பிரதமர் ஜூலியா கிலார்ட் நேற்று செவ்வாய்க்கிழமை இதனை அறிவித்தார். தற்போது 1,550 ஆத்திரேலியப் படையினர் அங்கு நிலைகொண்டுள்ளனர்.


ஆப்கானித்தானின் மத்திய உருஸ்கான் மாகாணத்திலேயே ஆத்திரேலியப் படையினர் பெரும்பாலும் தங்கியுள்ளனர். இவர்கள் அங்கே ஆப்கானிய இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.


ஒசாமா பின் லாடன், மற்றும் அல்-கைதாவின் முக்கிய உறுப்பினர்கள் அண்மையில் கொல்லப்பட்டதை அடுத்தே ஆத்திரேலியா தனது படைவிலகலை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டுள்ளது.


2013 ஆம் ஆண்டுக்குள் பெருமளவு படையினர் திரும்ப அழைக்கப்பட்டு விடுவர். ஆனாலும், சில சிறப்புப் படையினர் அங்கு 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் இருப்பர் என ஜூலியா கிலார்ட் தெரிவித்தார்.


2001 ஆம் ஆண்டில் ஆப்கானித்தான் மீது படையெடுத்து தலிபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியதில் இருந்து அங்கு இதுவரையில் 32 ஆத்திரேலியப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.


ஜூலியா கிலார்டின் ஆளும் தொழிற்கட்சி ஆத்திரேலியாவில் பெருமளவு செல்வாக்குக் குறைந்து காணப்படுகிறது. இதனாலேயே தமது செல்வாக்கை மீளப் பெறுவதற்காகவே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மூலம் தொகு

 

[[பகுப்பு:ஆஸ்திரேலியா]