ஆத்திரேலிய விமானம் இயந்திரக் கோளாறினால் சிங்கப்பூரில் அவசரமாகத் தரையிறங்கியது

வியாழன், நவம்பர் 4, 2010

இயந்திரக் கோளாறு காரணமாக ஆத்திரேலியாவின் ஏ380 சுப்பர் ஜம்போ விமானம் சிங்கப்பூரில் இன்று அவசரமாகத் தரையிறங்கியதை அடுத்து ஆத்திரேலிய விமானநிறுவனமான குவாண்டாஸ் உலகெங்கும் பயணத்தில் ஈடுபட்டிருந்த தனது அனைத்து ஆறு ஏ380 ஏர்பஸ் விமானங்களையும் தரையிறக்கியுள்ளது.


ஏ380 குவாண்டாஸ் விமானம்

சிட்னிக்கு செல்வதற்காக 433 பயணிகளுடனும் 26 பணியாளர்களுடனும் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட இவ்விமானம் இந்தோனேசியாவின் பட்டாம் தீவிற்கருகில் பறந்து கொண்டிருந்த போது அதன் நாங்கு இயந்திரங்களில் ஒன்றில் இருந்து பெரும் வெடிச்சத்தம் கேட்டதை அடுத்து விமானம் நடுங்க ஆரம்பித்தது என பயணி ஒருவர் தெரிவித்தார். சிங்கப்பூர் நேரம் இன்று காலை 10 மணிக்கு இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக குவாண்டாஸ் அறிவித்துள்ளது.


எஞ்சினில் இருந்து சிதறுண்ட சில பகுதிகள் பட்டாம் தீவில் வீழ்ந்ததைத் தரையில் உள்ளவர்கள் பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


"இது ஒரு மிகப் பாரதூரமான இயந்திரக் கோளாறு," என குவாண்டாஸ் தலைவர் அலன் ஜோயிஸ் தெரிவித்தார். இவ்விபத்தினால் எவரும் காயமடையவோ பாதிக்கப்படவோ இல்லை என அவர் தெரிவித்தார்.


சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்தில் தரையிறங்கிய இவ்விமானத்தின் இயந்திரத்தில் இருந்து பெரும் புகை கிளம்பியது. ஒரு இயந்திரம் முற்றாகக் கரிய நிறமாக மாறியிருந்தது.


மீதமிருந்த எரிபொருளைக் குறைப்பதற்காக கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தரையிறங்காமல் விமான நிலையத்தைச் சுற்றி வந்தது. ஆனாலும் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.


இவ்விபத்துக் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என குவாண்டாஸ் அறிவித்துள்ளது. ஏ380 சேவைகளை நடத்தும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சேவைகளை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அறிவித்துள்ளது.


கடந்த 10 நாட்களாக இந்தோனேசியாவின் மெராப்பி எரிமலை வெடிப்பின் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்ற வாதத்துக்கு குவாண்டாசிடம் இருந்து எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. பல விமான சேவைகள் இந்தோனேசியாவின் இப்பகுதியின் மேலாகப் பறப்பதை இடைநிறுத்தியிருந்தன.


எ380 உலகின் மிகப்பெரும் பயணிகள் விமானம் ஆகும். இரட்டைத் தட்டுகளைக் கொண்ட இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 800 பயணிகளைக் கொண்டு செல்லும்.


இவ்விமானத்தைத் தயாரித்த பிரித்தானியாவின் ரோல்ஸ்-ரோய்ஸ் நிறுவனம் இக்கோளாறு குறித்து தாம் ஆராய்வோம் என அறிவித்துள்ளது.


மூலம்

தொகு