அல்ஜீரியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

வியாழன், சூலை 1, 2010

சகாரா பாலைவத்தில் நேற்று புதன்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 அல்ஜீரியத் துணை இராணுவக் காவல்துறையினர் கொல்லப்பட்டதாக அல்ஜீரியாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.


மாலியுடனான எல்லைப் பகுதியில் டின்சுவாடின் என்ற நகரத்தில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இராணுவத்தினரிடம் இருந்த ஆயுதங்கள், மற்றும் தொலைத்தொடர்புச் சாதனங்களை எடுத்துவிட்டு தீவிரவாதிகள் வாகனத்துக்குத் தீ வைத்தனர்.


இது அல்ஜீரியாவில் இவ்வாண்டில் நடந்த தாக்குதல்களில் மிகவும் தீவிரமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.


அல்-கைதா அமைப்புடன் தொடர்புடைய இசுலாமிய ஆயுதக் குழுக்கள் அல்ஜீரியாவில் குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.


1992 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் இசுலாமியக் கட்சி வெற்றி பெற்றமை ரத்துச் செய்யப்பட்டதை அடுத்து அங்கு தீவிரவாதம் தலைதூக்கியது.


இதுவரை ஏறத்தாழ 150,000 பேர் வன்முறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். 1999 இல் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டதன் பின்னர் பல தீவிரவாதிகள் ஆயுதங்களைக் களைந்துள்ளனர்.


அதில் இருந்து அரசியல் வன்முறைகள் வெகுவாகக் குறைந்திருந்தாலும், தீவிர இசுலாமியக் குழுக்கள் ஆங்காங்கே தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

மூலம்

தொகு