அலைக்கற்றை விவகாரம்: கலைஞர் தொலைகாட்சி அலுவலகத்தில் சோதனை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, பெப்பிரவரி 18, 2011

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகம் நேற்றிரவு நடுவண் புலனாய்வு அமைப்பினரால் திடீர் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளும் திமுகவினரால் நடத்தப்படும் இந்நிறுவனம் தமக்கும் இந்த ஊழல் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையில் இச்சோதனை நிகழ்ந்துள்ளது.


ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட சாகிது உசுமான் பால்வா என்பவரின் சுவான் டெலிகொம் நிறுவனத்துக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் நடுவண் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவினால் அலைக்கற்றை முறையான கேள்விப் பத்திரம் இன்றி பால்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.


கலைஞர் தொலைக்காட்சியின் 60 வீதப் பங்குகள் முதல்வர் கருணாநிதியின் மனைவியின் பெயரிலும், 20 வீதப் பங்குகள் மகள் கனிமொழியின் பெயரிலும் உள்ளன.


இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் ஆண்டிமுத்து ராசா 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.


அலைக்கற்றை ஊழலில் அரசுக்கு ரூ.1,76,000 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடுவண் புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார். நடுவண் புலனாய்வு அமைப்பு, ராசாவை நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் பாட்டியாலா நீதிமன்றத்தில் நீதிபதி சைனி முன்பு நிறுத்தினர். நீதிபதி, ராசாவை வரும் மார்ச் மாதம் 3-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, நேற்று மாலை 4 மணியளவில் ராசா தில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ராசாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவைச் சாப்பிட நீதிமன்றக் கண்காணிப்பாளரிடம் இசைவு பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் ராசாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ராசாவின் தரப்பிலிருந்து ராசாவைப் பிணையில் எடுக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


மூலம்

தொகு