அலைக்கற்றை ஊழல் வழக்கு: கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை வழங்கப்பட்டது
செவ்வாய், நவம்பர் 29, 2011
- 17 பெப்ரவரி 2025: அலைக்கற்றை ஊழல்: முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பிணையில் விடுதலை
- 17 பெப்ரவரி 2025: அலைக்கற்றை ஊழல்: 122 நிறுவனங்களின் உரிமங்களை இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியது
- 17 பெப்ரவரி 2025: அலைக்கற்றை ஊழல் வழக்கு: கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை வழங்கப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: அலைக்கற்றை ஊழல் வழக்கு: ஐந்து பேருக்கு பிணை வழங்கப்பட்டது
- 17 பெப்ரவரி 2025: அலைக்கற்றை ஊழல்: கனிமொழி, ராசா உட்படப் 17 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார், சினியுக் பில்ம்ஸ் கரீம் மொரானி, குசோகான் நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் உள்ளிட்ட ஐவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்குவதாக நேற்று அறிவித்தது.
விசாரணைக்கு நீதிமன்றத்தில் தவறாமல் சமூகமளிக்க வேண்டும், கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும், வெளிநாட்டுக்கு பயணம் செய்ய கூடாது, சாட்சிகளை கலைக்க தவறும் பட்சத்தில் பிணை நிராகரிக்கப்படும் ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பிணை வழங்கப்பட்டது.
கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக தில்லி திகார் சிறையில் இருந்து வந்தார். அவரது பிணை மனுக்கள் 4 முறை தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் கடந்த 6 மாதம் வரை பிணை கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா, கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திரா பிப்பேரா ஆகிய நிறுவன அதிகாரிகள் 5 பேருக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதையடுத்து தங்களுக்கும் பிணை கிடைத்துவிடும் என்று கனிமொழி உள்ளிட்டோர் நம்பினர். இதனால் டிசம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய வழக்கை முன்னதாகவே விசாரிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டனர். இவர்களது பிணை மனுக்கள் தொடர்பாக வெள்ளிக்கிழமையும், நேற்றும் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் 5 பேருக்கும் பிணை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுராவுக்கு பிணை வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்ததால், அவரது மனு மீதான விசாரணை இன்றும் தொடரவுள்ளது.
நம்பிக்கை மோசடி, குற்றவியல் சதி, ஏமாற்றுதல், பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே இவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
மூலம்
தொகு- Kanimozhi, Asif Balwa & three others granted bail in 2G spectrum case , இகானமிக்ஸ் டைம்ஸ், நவம்பர் 28, 2011
- 2G case: DMK MP Kanimozhi, 4 others get bail, இந்தியன் எக்ஸ்பிரஸ், நவம்பர் 28, 2011
- Kanimozhi, four others get bail in 2G case, ஐபிஎன் லைவ், நவம்பர் 28, 2011
- கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.. சரத்குமாருக்கும்!, தட்ஸ்தமிழ், நவம்பர் 28, 2011
- கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன், தினமணி, நவம்பர் 28, 2011
- 6 மாத சிறைவாசம் முடிந்தது: எதிர்பார்த்து - ஏமாந்த கனிமொழிக்கு நிம்மதி , தினமலர் 28, 2011
- 2ஜி விவகாரம் : கனிமொழிக்கு ஜாமீன்! , தினகரன் 28, 2011