அலைக்கற்றை ஊழல்: 122 நிறுவனங்களின் உரிமங்களை இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியது

வெள்ளி, பெப்பிரவரி 3, 2012

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஊழல் மூலம் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை இந்திய உச்சநீதிமன்றம் நீக்குவதாக நேற்று அறிவித்தது. இந்த உரிமங்கள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா இந்தியத் தொலைத்தொடர்புத்துறை இருந்த காலகட்டத்தில் முறைகேடாக வழங்கப்பட்டவை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


அலைக்கற்றை ஊழல் காரணமாக இந்தியாவுக்கு 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நட்டமேற்பட்டதாக அரசுக் கணக்காய்வக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வூழல் தொடர்பாக அக்காலகட்டத்தில் நிதி அமைச்சராக இருந்த உட்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் விசாரிக்கப்பட வேண்டுமா என்பதை ஆராயும் படி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த ஊழல் பற்றித் தெரிந்திருந்தும் அது பற்றி நடவடிக்கை எடுக்க ப. சிதம்பரம் தவறியுள்ளார் என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. ஆனாலும் இக்குற்றச்சாட்டுகளை சிதம்பரம் மறுத்துள்ளார்.


ஊழலுக்கு எதிரான தன்னார்வ அமைப்பு, மற்றும் ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்திருந்த வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்திருக்கிறது. டாட்டா நிறுவனத்தின் மூன்று உரிமங்களும், வீடியோகான் நிறுவனத்தின் 21 உரிமங்களும், லூப் டெலிகாம் நிறுவனத்தின் 21 உரிமங்களும், யூனிநார் நிறுவனத்தின் 22 உரிமங்களும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் 13 உரிமங்களும், சிஸ்டமா-ஸ்யாம் நிறுவனத்தின் 21 உரிமங்களும், எடிசலாட்-டிபி நிறுவனத்தின் 15 உரிமங்களும், எஸ் டெல் நிறுவனத்தின் 6 உரிமங்களும், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 9 உரிமங்களும் நீக்கப்பட்டவைக்குள் அடங்குகின்றன.


நேற்று வழங்கப்பட்ட இத்தீர்ப்பினால் நாட்டின் 5 விழுக்காடு மொபைல் தொலைபேசிப் பயனர்கள் பாதிப்படைவார்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முறைகேடாக உரிமங்கள் பெற்றவுடன் தங்களது நிறுவன பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபமடைந்த மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தலா ஐந்து கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மூலம் தொகு