அலைக்கற்றை ஊழல்: வருமான வரித்துறை அலுவலகத்தில் கனிமொழி ஆஜர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், மே 12, 2011

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் தொடர்பான விசாரணைக்காக, சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ராஜ்யசபா எம்பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி இன்று ஆஜரானார். இந்த வழக்கு சிபிஐ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, டில்லியில் உள்ள சிபிஐ கோர்ட்டில், 14ம் தேதி வரை தினமும் கையெழுத்து இட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக முறைகேடு வழக்கில் கலைஞர் டி.வி. பங்குதாரராக உள்ள கனிமொழி மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கடந்த 6-ந்தேதி ஆஜர் ஆனார்.

அமலாக்கப்பரிவும் கனிமொழியிடம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவும் விசாரணைக்கு சென்னையில் ஆஜர் ஆகும் படி சம்மன் அனுப்பியது. சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டி இருப்ப‌தால், இவ்விரு நாட்களிலும் சிபிஐ சிறப்பு கோர்ட்டிற்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி இன்று சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைந்துள்ள வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் இன்று கனிமொழி ஆஜரானார்.அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். கனிமொழியின் வருகையை அடுத்து, அந்த அலுவலகதத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரிடம், 2004ம் ஆண்டு முதல் வருமான வரி கணக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நிறுவன முதலீடுகள், வாங்கியுள்ள பங்குகள் அனைத்து குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு