அலைக்கற்றை ஊழல்: ஆ. ராசாவின் உதவியாளர் தற்கொலை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், மார்ச்சு 17, 2011

இந்தியாவில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் விவகாரம் தொடர்பாகக் கடந்த பெப்ரவரியில் கைது செயப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பரெனக் கருதப்படும் சாதிக் பாட்சா என்பவர் நேற்று புதன்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


தொலைத் தொடர்புத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் அலைக்கற்றை ஊழலில் இவரும் நடுவண் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டார். ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்த சாதிக் பாட்சா கிரீன் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். ஆ. ராசா அமைச்சான பின்னரே இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.


தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் வீட்டிலிருந்து 4 கடிதங்களை காவல்துறையினர் கைப்பற்றினர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று அக்கடிதங்களில் பாட்சா எழுதியுள்ளார். பட்டதாரியான சாதிக் பாட்சா தனது சொந்த ஊரில் துணிமணிகள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். பின்னர் வீட்டு மனைகள் வாங்கல், விற்றல் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.


இவரின் தற்கொலையால் ஸ்பெக்டரம் ஊழல் விசாரணையில் பாதிப்பு ஏற்படாது என்று நடுவண் புலனாய்வு பணியகம் கூறியுள்ளது.


மூலம்

தொகு