அர்ஜென்டீன விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் 22 பேர் உயிரிழப்பு

வியாழன், மே 19, 2011

தெற்கு அர்ஜென்டீனாவில் சிறியரக பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 22 பேரும் கொல்லப்பட்டனர்.


சாப் 340 ரக விமானம்

நேற்று புதன்கிழமை இரவு உள்ளூர் நேரம் 9 மணியளவில் ரியோ நேக்ரோ மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த போது அபாய அறிவிப்புக் கிடைத்ததாகவும் சிறிது நேரத்தில் அது வீழ்ந்துள்ளதாகவும் சோல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமானம் வீழ்ந்த லொஸ் மெனுக்கோஸ் என்ற நகருக்கு மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நகரின் தென்மேற்கே 25 கிமீ தூரத்தில் இவ்விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.


எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும், விமானம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக உள்ளூர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


சுவீடன் தயாரிப்பான சாப் 340 ரக விமானத்தில் ஒரு குழந்தை உட்பட 19 பயணிகளும் மூன்று பணியாளர்களும் இருந்தனர்.


விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.



மூலம் தொகு