அமெரிக்காவும் உருசியாவும் உளவாளிகளைப் பரிமாறின
சனி, சூலை 10, 2010
- 3 சூன் 2023: சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்
- 27 பெப்பிரவரி 2018: இராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: மாலைத்தீவில் அவசரநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
ஐக்கிய அமெரிக்காவும் உருசியாவும் தாம் கைது செய்து வைத்துள்ள உளவாளிகளைப் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள வியாழக்கிழமையன்று உடன்பட்டன. சென்ற மாத இறுதியில் 11 உருசிய உளவாளிகளை அமெரிக்கா கைது செய்ததை அடுத்தே இரு நாடுகளுக்கும் இடையே இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த உடன்பாட்டின் படி அமெரிக்க மண்ணில் கைது செய்யப்பட்ட 10 உருசியர்களும், உருசியா கைது செய்த 4 அமெரிக்க உளவாளிகளும் விடுவிக்கப்பட்டனர். இவ் உளவு நடவடிக்கையுடன் தொடர்புடைய 11 ஆவது சந்தேக நபர் சைப்பிரசில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க நீதிமன்ற விசாரணையின் போது "வெளிநாடொன்றுக்காக உளவு பார்த்த" குற்றத்தை இந்த 10 இரசியர்களும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
உருசியாவில் கைதான நால்வரும், சிறப்பு விமானம் ஒன்றில் ஆஸ்திரியத் தலைநகர் வியென்னா நகருக்குக் கொண்டு செல்லப்பட்டதாக உருசிய செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் இயற்பியல் நிபுணர் ஈகர் சுத்யாகின் என்பவர் ஆவார். விடுவிக்கப்பட்ட நால்வரில் இருவர் பின்னர் ஐக்கிய இராச்சியத்துக்கும் இருவர் வாசிங்டனுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
இதே வேளையில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட 5 ஆண்களும் 5 பெண்களும் நியூயோர்க்கிலிருந்து புறப்பட்ட விமானமொன்றில் அனுப்பிவைக்கப்பட்டு, வியன்னாவில் வைத்து உருசிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டார்கள். இவர்கள் பின்னர் மாஸ்கோவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இக் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- "ரஷ்ய உளவாளிகள் 10 பேர் அமெரிக்காவில் கைது". விக்கிசெய்திகள், June 29, 2010
மூலம்
தொகு- "Spies swapped in Vienna are flown to Russia and the US". பிபிசி, ஜூலை 9, 2010 - (ஆங்கிலத்தில்)
- "கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் பிரகாரம் ரஷ்ய உளவாளிகளை நாடு கடத்தியது அமெரிக்கா". தினக்குரல், ஜூலை 10, 2010
- "US and Russia reach agreement on 'spy exchange'". பிபிசி, ஜூலை 8, 2010 - (ஆங்கிலத்தில்)
- "'Spy swap' under way as 10 plead guilty in US court". த கார்டியன், ஜூலை 8, 2010 - (ஆங்கிலத்தில்)