ரஷ்ய உளவாளிகள் 10 பேர் அமெரிக்காவில் கைது

புதன், சூன் 30, 2010

இரசிய அரசுக்கு உளவாளிகள் குழு ஒன்றின் 10 பேர் அமெரிக்காவில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இவர்கள் சாதாரண குடிமக்கள் போல் செயற்பட்டுவந்தனர் என்றும், இவர்களில் சிலர் தம்பதிகளைப் போன்று பல வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வெளிநாட்டு அரசொன்றுக்காக சட்டரீதியற்ற முகவர்களாகச் செயற்பட்டதாக இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆகக்கூடியது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இக்குற்றச்சாட்டுகள் முரண்பாடானவை என ரஷ்ய வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ஈகர் லியாக்கின் புரோலொவ் தெரிவித்தார். "தகவல்களை நாம் ஆராய்கிறோம். இவற்றில் பல முரண்பாடான தகவல்கள் உள்ளன," என அவர் தெரிவித்தார்.


ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரொவ் வாஷிங்டன் இதற்கு விளக்கம் தர வேண்டும் எனத் தெரிவித்ததாக ரஷ்யாவின் இண்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது.


கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கச் சட்டப்படி 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இவர்கள் அணுவாயுதங்கள், அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு நிலைகள், ஈரான் மற்றும் வெள்ளைமாளிகை செய்திகள், சி.ஐ.ஏ.தலைமைத்துவ மாற்றம் மற்றும் அரசியல் கட்சிகள் போன்றவை தொடர்பில் தகவல்களை சேகரித்ததாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


11 ஆவது நபர் ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அமெரிக்க அதிகாரிகளின் நண்பர்களாக இருந்து ரஷ்யாவுக்கு தகவல்களை அனுப்புமாறு இவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணைகளின் மூலமே வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த இவ் வலையமைப்பை கண்டுபிடித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இந்த விவகாரத்தினால் ரஷ்ய-அமெரிக்க உறவுகள் பாதிப்படையாது எனத் தாம் எதிர்பார்ப்பதாக ரஷ்யப் பிரதமர் விளாதிமிர் பூட்டின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மூலம் தொகு