அதிபர் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு

புதன், சனவரி 6, 2010


இலங்கையில் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இன்று நண்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதற்கான அறிவிப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ளார்.


இந்த தீர்மானத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமது நான்கு ஆண்டு ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் விடயத்தில், உரிய முனைப்புகளை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படையில் அவரை ஆதரிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தேர்தலை பகிஷ்கரித்தால், அதன் மூலம் மீண்டும் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.


எனவே அவர் மீண்டும் பதவிக்கு வருவதை தடுக்கக்கூடியவர் சரத் பொன்சேகா என்ற அடிப்படையிலேயே அவருக்கு ஆதரவளிக்க முன்வந்ததாக சம்பந்தன் தெரிவித்தார்.


இந்தநிலையில் மகிந்தவை விட பொன்சேகா தமிழர்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்திருப்பதாக சம்பந்தன் குறிப்பிட்டார்.


அதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அதிபர் ராஜபக்ச்சவும் பொன்சேகாவும் பகீரத முயற்சியில் இறங்கியிருந்தனர்.


இலங்கையின் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத் தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 21 நாடாளுமன்ற உறுப் பினர்கள் உள்ளனர்.


முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பொன்சேகாவும் எதிர்க் கட்சிகளின் சார்பில் ரணில் விக்ரமசிங்கேவும் சந்தித்துப் பேசினர். அப்போது தமிழர்களின் நல்வாழ்வுக்கு 10 அம்சத் திட்டங்களை நிறைவேற்று வதாக பொன்சேகா உறுதி அளித்தார்.


முன்னைய விடுதலைப் புலிகள் உட்பட அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, அதி உயர் பாது காப்பு வளையங்களை நீக்குதல், உரிய வகையில் மறுகுடியேற்றத்தை மேற்கொள்வது, தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களை வேறு பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் போன்றவை பத்து அம்சத்திட்டங்களில் அடங்கும். தமிழர்களின் நிலங்களைத் திருப்பித் தருவேன் என்றும் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.

மூலம்

தொகு