அண்டார்க்டிக்கா பனிக்கடலில் சிக்கிய உருசியக் கப்பல் மீண்டது
புதன், சனவரி 8, 2014
- 8 சனவரி 2014: அண்டார்க்டிக்கா பனிக்கடலில் சிக்கிய உருசியக் கப்பல் மீண்டது
- 3 சனவரி 2014: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பல் பயணிகள் 52 பேரும் மீட்கப்பட்டனர்
- 29 திசம்பர் 2013: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பலை மீட்க ஆத்திரேலிய பனி உடைப்புக் கப்பல் விரைகிறது
- 18 ஏப்பிரல் 2013: அண்டார்க்டிக்கா பனிப்பாறைகள் பெருகுகின்றன, உருகும் பனியே காரணம்
- 17 செப்டெம்பர் 2012: அண்டார்க்டிக்காவில் நடைப்பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்த சர் ரானுல்ஃப் பைன்சு திட்டம்
அண்டார்க்டிக்காவின் பனிக்கடலில் இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக சிக்குண்டிருந்த உருசிய ஆய்வுக் கப்பல் காலநிலை ஓரளவு சீரானதை அடுத்து பனிக்கட்டியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வெளியேறித் தனது பயணத்தைத் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்காதெமிக் சொக்கால்ஸ்கி என்ற இவ்வாய்வுக் கப்பல் தற்போது 7 நொட்டுகள் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. பனிக்கட்டியில் சிக்குண்ட இக்கப்பலை மீட்பதற்காக சென்ற சீனப் பனியுடைப்புக் கப்பலும் பனியில் சிக்கி நகர முடியாமல் இருந்தது. அதுவும் தற்போது வெளியேறியுள்ளது.
இப்பகுதியில் காற்று திசை மாறி வீசியதால் பனிப்பாறைகளில் ஒரு பிளவு ஏற்பட்டதாக உருசியக் கப்பல் தலைவர் தெரிவித்தார்.
உருசியக் கப்பலில் பயணம் செய்த 52 ஆய்வாளர்கள், மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கடந்த வாரம் சீனக் கப்பலில் இருந்து சென்ற உலங்கு வானூர்தி ஒன்றின் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவுரோரா என்ற ஆத்திரேலியக் கப்பல் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இக்கப்பல் தற்போது கேசி என்ற ஆத்திரேலிய ஆய்வுக் கூடத்தை நெருங்கியுள்ளது. அங்கு அக்கப்பல் எரிபொருளைப் பெற்றுக் கொண்டு தாஸ்மானியா நோக்கிச் செல்லும்.
101 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியாவில் இருந்து அண்டார்க்டிக்காவுக்குச் சென்ற டக்லசு மோசன் என்பவரின் பிரசித்தி பெற்ற பயணப் பாதை வழியே அக்காதெமிக் சொக்கால்ஸ்கி கப்பலும் செல்லவிருக்கிறது.
தொடர்புள்ள செய்தி
தொகுமூலம்
தொகு- Stranded Russian Vessel Free from Antarctic Ice, ரியா நோவஸ்தி, சனவரி 7, 2014
- Antarctic escape: Akademik Shokalskiy, Xue Long break free from pack ice, சிட்னி மோர்னிங் எரால்டு, சனவரி 8, 2014