அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பல் பயணிகள் 52 பேரும் மீட்கப்பட்டனர்

வெள்ளி, சனவரி 3, 2014

அண்டார்க்டிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
அண்டார்க்டிக்காவின் அமைவிடம்

அண்டார்க்டிக்காவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

அண்டார்க்டிக்காவின் கடல் பனிக்கட்டியில் ஒரு வார காலத்துக்கும் அதிகமாக சிக்குண்டிருந்த உருசியக் கப்பலில் இருந்த 52 பயணிகள், மற்றும் ஆய்வாளர்களை சீனப் பனியுடைப்புக் கப்பலில் இருந்த உலங்கு வானூர்தி வெற்றிகரமாக நேற்று மீட்டுள்ளது.


அக்காதெமிக் சொக்கால்ஸ்கி

அகாதமிக் சொக்கால்ஸ்கி என்ற இந்த உருசிய ஆய்வுக் கப்பல் டிசம்பர் 24 ஆம் நாள் டூமோன்ட் டி'ஊர்வில் என்ற பிரெஞ்சுத் தளத்தில் இருந்து 100 கடல் மைல் தொலைவில் கடும் பனிக்கட்டியில் சிக்குண்டது. இக்கப்பலில் 22 மாலுமிகளும், 52 பயணிகளும் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் அண்டார்க்ட்டிக் ஆய்வாலர்கள். ஏனையோர் சுற்றுலாப் பயணிகள்.


இக்கப்பலை விடுவிக்கவென பிரெஞ்சு, சீன, மற்றும் ஆத்திரேலியப் பனியுடைப்புக் கப்பல்கள் அங்கு விரைந்தன, ஆனாலும் கடும் பனி காரணமாக அவற்றால் உருசியக் கப்பலை நெருங்க முடியவில்லை.


இதனை அடுத்து சீனக் கப்பலில் நிலை கொண்டிருந்த உலங்குவானூர்தி பயணிகள் அனைவரையும் நேற்று பாதுகாப்பாக ஆத்திரேலியக் கப்பலுக்குக் கொண்டு சென்றது.


உருசியக் கப்பலின் மாலுமிகள் 22 பேரும் கப்பலிலேயே தங்கியுள்ளனர். காலநிலை சீரானதும், கப்பலை மீண்டும் இயக்க அவர்கள் முயற்சி செய்வார்கள்.


101 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியாவில் இருந்து அண்டார்க்டிக்காவுக்குச் சென்ற டக்லசு மோசன் என்பவரின் பிரசித்தி பெற்ற பயணப் பாதை வழியே அக்காதெமிக் சொக்கால்ஸ்கி கப்பலும் செல்லவிருந்தது. பின்லாந்தில் வடிவமைக்கப்பட்ட இக்கப்பல் கடும் பனிக்கட்டிப் பாறைகளை உடைத்துச் செல்லவல்லது எனக் கூறப்பட்டது.


இதற்கிடையில், சீன பனியுடைப்புக் கப்பலும் இப்போது நகர முடியாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தொடர்புள்ள செய்தி

தொகு

மூலம்

தொகு