அசாம் போராளிக் குழு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது
திங்கள், சனவரி 17, 2011
- 5 மார்ச்சு 2016: தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் தேர்தல் அறிவிப்பு
- 13 ஏப்பிரல் 2014: இந்தியப் பொதுத் தேர்தல் 2014: நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
- 8 ஏப்பிரல் 2014: இந்தியப் பொதுத் தேர்தல் 2014: முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது
- 1 மே 2012: அசாமில் பயணிகள் படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
- 23 திசம்பர் 2011: அசாம் மாநிலத்தில் நடந்த குண்டுத் தாக்குதலில் 7 பேர் இறப்பு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமின் உல்ஃபா என்றழைக்கப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் அசாம் மாநில அரசைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உல்ஃபாவின் தலைவர் அரவிந்த ராஜ்கோவா அசாம் முதல்வர் தருண் கோகோய்க்கு இது குறித்துக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டார் என்ற குற்ற்ம்சாட்டப்பட்டுக் கைதான அரவிந்த ராஜ்கோவா சென்ற மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டில் இருந்து அசாம் தனிநாடாக வேண்டும் என்று கோரி இவர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதலமைச்சர் கோகோய் செய்தியாளர்களிடம் இது குறித்துத் தெரிவிக்கையில், அரசுடன் உல்ஃபா பேச்சுவார்த்தைக்குத் தயாராய் உள்ளதாகத் தமக்கு அறிவித்துள்ளதாகக் கூறினார்.
"ஆனாலும் அவர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு இன்னும் வரவில்லை, அது வரையில் நாம் காத்திருப்போம்," என அவர் கூறினார். உல்ஃபாவின் உயர் பீடம் இது குறித்துத் தீர்க்கமான முடிவு ஒன்றை விரைவில் எடுக்கும் என ராஜ்கோவா அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டில் வங்காளதேச அரசு தமது நாட்டுக்குள் செயல்படும் உல்ஃபா தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான இராணுவ நடவடிக்கையை எடுத்திருந்தது. இதனை அடுத்து ஐம்பதிற்கும் மேற்பட்ட உல்ப்ஃஃ தலைவர்கள், மற்றும் போராளிகள் அங்கு கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் பலர் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.
மூலம்
தொகு- India rebel group in Assam 'offers talks', பிபிசி, சனவரி 17, 2011