அக்டோபர் 31 இல் பிறந்த எந்தக் குழந்தையும் 700 கோடியாவது குழந்தையே, ஐநா அறிவிப்பு

செவ்வாய், நவம்பர் 1, 2011

நேற்று அக்டோபர் 31 இல் பிறந்த எந்தக் குழந்தையும் 700 கோடியாவது ஆளாகக் கருதப்படும் என்று ஐநா அறிவித்துள்ளது.


உலகின் மக்கள்தொகை எழுநூறு கோடியை நேற்றுத் தொட்டது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், எந்தக் குழந்தை எழுநூறு கோடியாவது ஆள் என்று குறிப்பிட்டு ஐ.நா. தேர்ந்தெடுக்கவில்லை. உலகின் மக்கள்தொகை எழுநூறு கோடியைத் தொடும் நாளாக நேற்றைய தினத்தை ஐ.நா. தேர்ந்தெடுத்துள்ளதும் குறியீட்டு அளவில்தான்.


இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மால் என்ற கிராமத்தில் நேற்றுப் பிறந்துள்ள நர்கிஸ் என்ற பெண் குழந்தையை பிளான் இண்டர்நேஷனல் என்ற குழந்தைகள் உரிமைக்குழு உலகின் 700 கோடியாவது குழந்தையாக குறியீட்டளவில் தேர்வுசெய்துள்ளது. பெண் குழந்தைகள் கருவில் அல்லது பிறந்தவுடன் கொல்லப்படுகின்ற பிரச்சினை இந்தியாவில் இருந்து வருவதை உலகின் கவனத்துக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்தக் குழந்தை தேர்ந்தெடுக்கப்படுவதாக பிளான் இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது.


இருப்பினும் தற்போது 700வது கோடி குழந்தை பிலிப்பீன்சில் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் மக்கள்தொகை 300 மில்லியனாக இருந்தது. 1800ம் ஆண்டில் அது ஒரு பில்லியனாகவும், 1927ல் இரண்டு பில்லியனாகவும், 1960ல் மூன்று பில்லியனாகவும், 1974ல் நான்கு பில்லியனாகவும் 1987ல் ஐந்து பில்லியனாகவும், 1999ல் ஆறு பில்லியனாகவும், 2011 ஒக்டோபர் 31ம் திகதி ஏழு பில்லியனாகவும் அதிகரித்துள்ளது.


1999ல் உலகின் சனத்தொகை 600 கோடியை எட்டியபோது போஸ்னியாவில் ஹெர்செகோவினா என்ற இடத்தில் பிறந்த அத்னன் நெவிக் என்ற குழந்தையை அறுநூறு கோடியாவது ஆளாக ஐ.நா. தேர்ந்தெடுத்தது. ஆனால் தங்களின் இந்த கணிப்பில் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரையிலான தவறு இருக்கலாம் என்பதை ஐ.நா. ஒப்புக்கொண்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை 800 கோடியை எட்டிவிடும், 2050ல் 900 கோடியை எட்டிவிடும் என்று ஐ.நா. கணித்துள்ளது.


மூலம் தொகு