'மாபெரும் வொம்பாட்டு' ஒன்றின் எலும்புக்கூடு ஆத்திரேலியாவில் கண்டுபிடிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

புதன், சூலை 6, 2011

இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் "மாபெரும் வொம்பாட்டு" (wombat) ஒன்றின் எலும்புக்கூடு ஒன்றை ஆத்திரேலியத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


மாபெரும் வொம்பாட்டின் எலும்புக்கூடு

பைம்மா இனத்தைச் சேர்ந்த பேரெலிகளான இந்தத் தாவர உண்ணி வொம்பாட்டு 3 தொன் எடையைக் கொண்டிருக்கலாம் எனவும், நாற்சக்கர வாகனம் ஒன்றின் அளவைக் கொண்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வட-கிழக்குப் பகுதியில் புளோராவில் என்ர இடத்தில் இந்த வொம்பாட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொல்லுயிர் எச்சங்கள் பல இருக்கலாம் என்று கருதப்படுவதால் பல ஆண்டுகளாக இப்பகுதி அறிவியலாளர்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. பெரிய வகையான இந்த மிருகங்கள் மனித வேட்டையினாலும், காலநிலை மாற்றங்களினாலும் அழிந்திருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.


இந்த எலும்புக்கூடு முழுமையானதாக இருப்பதால் ஆத்திரேலியாவின் வரலாற்றுக்கு முன்னரான கண்டுபிடிப்புகளில் இக்கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.


முதலாவது ஆத்திரேலியப் பழங்குடிகள் வாழ்ந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வகையான வொம்பாட்டுகள் பரவலாக வாழ்ந்துள்ளன.


நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மைக் ஆர்ச்சர் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "என்றுமே அறிந்திராத மாபெரும் பைம்மா (marsupial) ஒன்றை நாம் கண்டுபிடித்துள்ளோம்," என்றார். இவை "வயிற்றில் பை ஒன்றைக் கொண்டுள்ள மிருகங்களில் இவை மிகப் பெரியதாகும்."


கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு குயின்ஸ்லாந்தின் ரிவர்ஸ்லி தொல்லுயிர் மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


மூலம்

தொகு