67பி வால்வெள்ளியில் ஆக்சிசன், ரொசெட்டா விண்கலம் கண்டுபிடித்தது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், அக்டோபர் 29, 2015

ஐரோப்பாவின் ரொசெட்டா விண்கலம் தான் சுற்றி வரும் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ (67பி) வால்வெள்ளியை சூழ்ந்திருக்கும் வளி முகிலில் ஆக்சிசன் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது.


நமது சூரியக் குடும்பம் எவ்வாறு தோன்றியது என்னும் கணிப்பு தவறாக இருக்கலாம் என இம்முடிவுகள் காட்டுவதாக அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கோள்கள் உருவாகிக்கொண்டிருக்கும் போது ஆக்சிசன் ஏனைய தனிமங்களுடன் வினை புரிந்திருக்கலாம் என நம்பப்பட்டது.


இது குறித்த ஆய்வு முடிவுகள் நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. வால்வெள்ளியைச் சுற்றி நீராவி, கார்பன் மோனொக்சைடு, கார்பனீரொக்சைடு ஆகியவற்றுக்கு அடுத்ததாக சுயாதீன ஆக்சிசன் மூலக்கூறுகள் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.


ஆக்சிசன் பொதுவாக ஏனைய மூலக்கூறுகளுடன் மிக விரைவில் வினை புரிகின்றன, இதனால் அவை தனி மூலக்கூறுகளாக இருப்பது மிக அரிதாகும். வால்வெள்ளியில் ஆக்சிசன் மூலக்கூறுகள் மிக விரைவில் உறைந்து போயிருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


2004 மார்ச் மாதத்தில் ஆரியான் ஏவூர்தி மூலம் ரொசெட்டா விண்கலம் 67பி வால்வெள்ளியை நோக்கிய நீண்ட பயணத்தை ஆரம்பித்திருந்தது. பனிக்கட்டியும், தூசுகளும் நிறைந்த வால்வெள்ளியை ரொசெட்டா விண்கலம் சுற்றி வந்து வால்வெள்ளியின் தரை மீது ஒரு சிறு தளவுளவியை 2014 நவம்பரில் கீழிறக்கியது. இத்தளவுளவியுடனான தொடர்புகள் சில நாட்களில் நின்று போயிற்று. ஆனாலும், வால்வெள்ளியைச் சுற்றி வரும் ரொசெட்டா தாய்க்கலம் மிகவும் பயனுள்ள தகவல்களை புவிக்கு அனுப்பி வருகிறது.

இவற்றையும் பார்க்க

தொகு


மூலம்

தொகு