400 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தக்கூடிய பெரும் நீர்த்தேக்கம் நமீபியாவில் கண்டுபிடிப்பு

சனி, சூலை 21, 2012

தெற்கு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நீர் வாயில் ஒன்று மிகவும் வறண்ட ஆப்பிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீர்த்தேக்கம் இன்னும் 400 ஆண்டுகளுக்குப் போதுமான அளவு நீரை வழங்க வல்லது எனக் கணிக்கப்பட்டுள்ளது.


இந்நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் 10,000 ஆண்டுகள் பழமையானது ஆனாலும், இந்த நீர் தற்போது பயன்பாட்டில் உள்ள நீரை விட மிகவும் சுத்தமானது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


கடந்த சில ஆண்டுகளாக நமீபிய அரசு செருமனி, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உதவியுடன் ஆய்வுகளை நடத்தி வருகிறது. தற்போது அவர்கள் அங்கோலாவுக்கும் நமீபியாவுக்கும் இடையில் பாயும் ஒகாங்குவேனா II என்ற நிலத்தடி நீர்த்தேக்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். நமீபியாவின் எல்லைப் பகுதியில் இது 1,075 சதுரமைல் பரப்பளவில் காணப்பட்டுள்ளது.


தற்போது நமீபியாவின் வடக்கில் வாழும் 800,000 குடிமக்களுக்கு அயல் நாடான அங்கோலாவில் இருந்து வரும் 40 ஆண்டு-காலப் பழமையான கால்வாய் ஒன்றின் மூலமே நீர் வழங்கப்படுகிறது.


மூலம்

தொகு