2013 இலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் செப்டம்பர் 21 இல் நடைபெறும்
வெள்ளி, ஆகத்து 2, 2013
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றனர்
- வடமாகாண சபையின் முதலமைச்சராக சி. வி. விக்னேசுவரன் அரசுத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றார்
- வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு
- வட மாகாணசபைத் தேர்தல், 2013: தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி
- வட மாகாணசபைத் தேர்தல், 2013: வன்முறைகளுக்கு நடுவில் இன்று தேர்தல்
இலங்கையின் வடக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது. மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 3785 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிடுகின்றனர். மூன்று மாகாண சபைகளுக்கும் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். 4,358,261 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய மாகாண சபைக்கு கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் சயேச்சைக் குழுக்கள் சார்பில் 1517 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். வடமேல் மாகாணத்தில் இரண்டு மாவட்டங்களுக்கும் 1362 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் களமிறங்கியுள்ளனர்.
- வட மாகாணம்
வட மாகாணத்தில் 36 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 906 பேர் இங்குள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றனர். 714,488 பேர் இங்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 426,703 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 4 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 68,589 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 72,420 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 94,367 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் 52,409 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வட மாகாணசபைக்கு முதற்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெறுகின்றன.
இலங்கைத் தொழிலாளர் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனசத பெரமுன, சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஜனநாயக சுதந்திரக் கட்சி, ஜனநாயக ஐக்கிய முன்னணி, ஐக்கிய சோசலிசக் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன பட்சய ஆகிய 11 அரசியல் கட்சிகள் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. அத்துடன் அன்ரனி ரங்கதுசாரா, இராஜலிங்கம் விதுன்நாச், ரங்கநாதன் திரிலோகநாதன், பின் மதிமுகராசா விஜயகாந், ஜனுன் முகமட் விஜய், இராசரத்தினம் தாமோதரம் ராஜா, மாணிக்கசோதி அபிமன்னசிங்கம், செல்வி. தம்பிப்பிள்ளை இருதயநாதர், கிருஷ்ணசாமி சுபாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான 9 சுயேச்சை குழுக்களும் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ளன.
- மத்திய மாகாணம்
மத்திய மாகாணத்தில் 56 உறுப்பினர்களை தெரிவு செய்ய 1,889,557 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்தில் 1,015,315 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் 366,549 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் 507,693 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 2009 தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 36 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி 22 உறுப்பினர்களையும், பெற்றிருந்தது.
- வடமேல் மாகாணம்
வட மேல் மாகாணத்தில் 50 பிரதிநிதிகளை தெரிவு செய்ய 1,754,218 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில் 1,227,810 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 34 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் 526,408 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 16 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். 2009 தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 37 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சி 14 உறுப்பினர்களையும், மக்கள் விடுதலை முன்னணி ஒரு உறுப்பினரையும் பெற்றிருந்தன.
மூலம்
தொகு- மூன்று மாகாண சபைகளிலும் செப். 21ஆம் திகதி தேர்தல் 3,785 வேட்பாளர்கள் களத்தில், வீரகேசரி, ஆகத்து 2, 2013
- Polls on September 21, டெய்லிமிரர், ஆகத்து 1, 2013