2012 ஒலிம்பிக்சு: எட்டு வீராங்கனைகளை உலக இறகுப்பந்தாட்டக் கழகம் தகுதியிழந்ததாக அறிவித்தது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், ஆகத்து 1, 2012

"போட்டிகளில் தமது முழுத் திறமையும் காட்டாது" விளையாடியமைக்காக எட்டு இறகுப்பந்தாட்ட (badminton) விளையாட்டு வீராங்கனைகளை உலக இறகுப்பந்தாட்டக் கழகம் மேலும் விளையாடுவதற்குத் தகுதியிழந்தவர்களாக இன்று அறிவித்துள்ளது.


இறகுப்பந்தாட்டச் சின்னம்

தென் கொரியாவைச் சேர்ந்த நால்வரும், சீனாவைச் சேர்ந்த இருவரும், இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவரும் ஆக எட்டுப் பேர் நேற்று இலண்டனில் நடந்த ஒலிம்பிக் சுற்றுப் போட்டிகளின் பின்னர் மேலும் விளையாடுவதற்குத் தகுதியிழந்தவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இந்த நான்கு சோடிகளும் நேற்று நடந்த போட்டியில் வேண்டுமென்றே தோற்றதாக எழுந்த சர்ச்சையை அடுத்தே உலக இறகுப்பந்தாட்டக் கழகம் இம்முடிவை அறிவித்துள்ளது.


காலிறுதிக்கு சீனா ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில், நேற்றையை போட்டிகளில் விளையாடிய சீன இரட்டையர்கள் மற்றும் தென் கொரிய வீராங்கனைகள் சமனில் முடிக்கும் நோக்குடன் விளையாடியுள்ளனர். இறுதியில் தென் கொரிய அணி வெற்றி பெற்றது. இதில் சீனா இறுதிப் போட்டியில் வலிமையான அணிகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே தோல்வியுற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்தக் குற்றச்சாட்டுக்கு தென்கொரிய வீராங்கனைகள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. சீன வீராங்கனைகள் அடுத்த போட்டியில் விளையாடுவதற்காகத் தங்கள் ஆற்றலைப் பாதுகாத்ததாக செய்தியாளர்களிடம் கூறினர்.


மூலம்

தொகு