2011 பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் டென்னிசு போட்டியில் சீனாவின் லீ நா வெற்றி

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, சூன் 5, 2011

பிரெஞ்சு ஓப்பன் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதன் முறையாக சீனாவின் லீ நா வெற்றி பெற்று சாதனை படைத்தார். ஆசிய நாட்டவர் ஒருவர் டென்னிசு ஒற்றையர் ஆட்டம் ஒன்றில் பெரு வெற்றித் தொடர் (கிராண்ட் சிலாம்) பட்டம் வெல்வது இதுவே முதன் முறையாகும்.


லீ நா

பிரான்சின் தலைநகர் பாரிசில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் உலகத் தர வரிசையில் ஏழாவதாக இருந்த 29 வயதான லீ ஐந்தாம் தரத்தில் இருந்த இத்தாலியைச் சேர்ந்த நடப்பு சம்பியன் பிரான்செசுக்கா சியாவோனியை 6-4, 7-6 என்ற நேர் கணக்கில் வென்று கோப்பையை வென்றார். லீ இவ்வாண்டில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய ஓப்பனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார்.


இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இறுதிச்சுற்றில் இசுப்பானியாவின் ரஃபேல் நடால், சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அரையிறுதிச் சுற்றில் நடப்புச் சாம்பியனான நடால் 6-4, 7-5, 6-4 என்ற கணக்கில் பிரித்தானியாவின் ஆண்டி மரேயை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் பெடரர் 7-6, 6-3, 3-6, 7-6 (5) என்ற கணக்கில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.


இதற்கிடையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் இரட்டையர் இறுதிச்சுற்றில் செக். குடியரசின் ஆண்ட்ரியா-லூசி இணைந்து 6-4, 6-3 என்ற கணக்கில் சானியா-வெஸ்னினா இணையை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றியது. கிராண்ட் சிலாம் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சானியா பெற்றார்.


மூலம்

தொகு