2002 குஜராத் வன்முறை: 18 பேருக்கு ஆயுள் தண்டனை

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், ஏப்பிரல் 12, 2012

2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரங்களின் போது 23 முஸ்லிம்களைப் படுகொலை செய்த குற்றங்களுக்காக 18 பேருக்கு இந்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 5 பேருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


ஓடே என்ற ஊரில் 2002 மார்ச் 1 ஆம் நாள் வீடொன்றில் தஞ்சமடைந்திருந்த 23 முஸ்லிம்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இறந்தவர்களில் பலர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இவர்கள் மேன்முறையீடு செய்யவிருப்பதாக குற்றவாளிகள் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் தெரிவித்தார்.


2002 பெப்ரவரி 27 ஆம் நாள் அயோத்தியாவிலிருந்து சபர்மதி விரைவு வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த 59 இந்துப் பயணிகள் இறந்த இந்நிகழ்வு 790 இசுலாமியரும் 254 இந்துக்களும் பரந்தளவில் கொல்லப்பட்ட குசராத் வன்முறைக்குத் தூண்டுதலாக அமைந்தது. அண்மைக்காலங்களில் இந்தியாவில் இடம்பெற்ற மிக மோசமான மதக்கலவரமாக இது பார்க்கப்படுகிறது.


குஜராத் வன்முறைகளின் போது 10 நிகழ்வுகள் மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் மூன்றாவது தீர்ப்பு இதுவாகும். 47 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். ஒருவர் வழக்குக் காலத்தில் இறந்து விட்டார்.


குஜராத்தில் சர்தார்ப்புரா கிராமத்தில் 33 முஸ்லிம்களை உயிருடன் தீயிட்டுக் கொலை செய்த நிகழ்வில் கடந்த ஆண்டு 2011 நவம்பரில் 31 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது.


சபர்மதி தொடருந்தில் 59 இந்துப் பயணிகளைக் கொன்ற குற்றத்திற்காக கடந்த ஆண்டு பெப்ரவரியில், 11 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. 20 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு