1968 விமான விபத்தில் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது
ஞாயிறு, செப்டெம்பர் 1, 2013
- 1 செப்டெம்பர் 2013: 1968 விமான விபத்தில் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது
- 21 சூன் 2013: வட-இந்திய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு, பலர் உயிரிழப்பு
- 23 திசம்பர் 2011: தலைமறைவாக இருந்த சுவாமி நித்தியானந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் கைது
- 23 திசம்பர் 2011: இமாச்சலப் பிரதேசப் பழங்குடியினர் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் வாரிசுகளா?
இமாலயப் பகுதியில் விமான விபத்தொன்றின் போது கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர் ஒருவரின் உடல் 45 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மைல் சிங் என்பவரின் உடல் இமாச்சலப் பிரதேசத்தின் வடக்கே டாக்கா பனியாற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலுடன் காணப்பட்ட அடையாளத் தட்டு, காப்புறுதிப் பத்திரம், கடிதம் ஒன்று ஆகியவை மூலம் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
1968 பெப்ரவரி 7 இல் அந்தோனொவ்-12 என்ற இராணுவத்தினரின் சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 98 இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இவர்களுடன் 4 பணியாளர்களும் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தையும், இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மிரையும் இணைக்கும் ரோட்டாங் வழியில் விமானத்தில் இருந்து கடைசித் தகவல் கிடைக்கப்பெற்றது. அதன் பின்னர் விமானத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இவ்விமானத்தின் சிதைந்த பகுதிகள் 2003 ஆண்டில் டாக்கா பனியாற்றுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பின்னர் இடம்பெற்ற தேடுதல்களில் 4 உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. டாக்கா பனியாறு அண்ணளவாக 17,000-18,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
மேலும் உடல்களைத் தேடும் நடவடிக்கைகள் ஆகத்து 16 இல் ஆரம்பமாயின. விமானத்தின் கருப்புப் பெட்டி இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
மூலம்
தொகு- Mortal remains of soldier recovered 45 years after IAF plane crash, இந்தியா டுடே, செப்டம்பர் 1, 2013
- India Himalayas 1968 plane crash yields body, பிபிசி, செப்டம்பர் 1, 2013