17.4 மில்லியன் இலக்கங்கள் கொண்ட முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டது

வெள்ளி, பெப்பிரவரி 8, 2013

கணிதவியலாளரும் மத்திய மிசூரிப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான கேர்ட்டிஸ் கூப்பர், இதுவரை அறியப்பட்டவற்றில் மிகப்பெரிய முதன்மை எண்ணைக் கண்டுபிடித்துள்ளார். சனவரி 25ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட இது பெப்ரவரி ஆரம்பத்திலிருந்து பல்வேறு நபர்களாலும், பல்வேறு மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்களைப் பயன்படுத்தி சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பின்னர் இது பற்றிய செய்தி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.


GIMPS என்று அறியப்படும் கணினி வேலைத்திட்டத்தின் கீழ் இம் முதன்மை எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்துக்கான கணனி செய்நிரலான பிரைம்95 ஆனது பல்கலைக்கழகத்திலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணினிகளில் செயற்படுத்தப்பட்டது.


சனவரி 25 அன்று இந்த முதன்மை எண், பல்கலைக்கழகக் கணினி ஒன்றிலிருந்து GIMPS சேவையகக் கணனிக்கு அறிவிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடிப்பதற்காக இக் கணினி 39 நாட்கள் தொடர்ந்து ஓய்வின்றி செயற்பட்டிருந்தது. எவ்வாறாயினும் ஏனைய பெறுபேறுகளைப் போலவே இக் கண்டுபிடிப்பும் பல்வேறு தரப்பினராலும் சரிபார்க்கப்பட்ட பின்னரே அறிவிக்கப்பட்டது. இதற்காக மூன்று தனித்தனி சரிபார்ப்புக்கள் நடத்தப்பட்டன. இதற்காக சக்திவாய்ந்த கணனி வன்பொருட்கள் பயன்படுத்தப்பட்டதுடன் மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை தேவைப்பட்டன.


முதன்மை எண் அல்லது பகா எண் என்பது 1ஆலும் தன்னாலும் மீதியின்றி வகுபடக்கூடிய 1 இலும் கூடிய நேர் முழுவெண் ஆகும். சில முதன்மை எண்களாக 2, 3, 5, 7, 11, 13, 17 மற்றும் 19 ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எனினும் 77 (உதாரணமாக) ஒரு முதன்மை எண் அல்ல. ஏனெனில் இது 7 மற்றும் 11 ஆகியவற்றின் பெருக்கமாகும். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மை எண் 257,885,161 − 1 எனும் தொடர்பால் தரப்படும். மேலும் இதில் 17,425,170 இலக்கங்கள் உள்ளன. இது ஒரு சிறப்பு வகை முதன்மை எண்ணாகும். இது மேர்சேன் முதன்மை எண் என அழைக்கப்படுகிறது. இதன் வடிவம் 2p − 1 என்றவாறு இருக்கும். இங்கு அவ்வெண் முதன்மை எண்ணாக இருக்க pயும் முதன்மை எண்ணாக இருப்பது அவசியமாகும். பெப்ரவரி 2013ன் படி, 48 மேர்சேன் முதன்மை எண்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


1996ல், ஜோர்ஜ் வோல்ட்மன் என்பவரே GIMPS செயற்திட்டத்தை உருவாக்கி வழிநடத்தியவர். இச் செயற்திட்டமே தொடர்ச்சியாக செயற்படும் கணினிச் செயற்திட்டம் ஆகும். கூப்பர் இதற்கு முன் வேறு இரண்டு மேர்சேன் முதன்மை எண்களைக் கண்டுபிடித்துள்ளார். இவற்றுள் 230,402,457 − 1 என்பது டிசம்பர் 2005இலும், 232,582,657 − 1 என்பது செப்டம்பர் 2006இலும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்போது ஸ்டீவன் போன் எனும் பேராசிரியரும் பங்குபற்றியிருந்தார். இக்கண்டுபிடிப்பு மூலம் நான்கு வருடங்களின் பின் மற்றொரு எண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னைய மேர்சேன் முதன்மை எண் ஏப்பிரல் 2009 இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.


மூலம் தொகு