130 ஆண்டுகளாகக் காணாமல் போயிருந்த பிஜி கடல்பறவைகள் திரும்பின

சனி, செப்டம்பர் 12, 2009, பிஜி:


உலகின் மிக அரிதானதும் எளிதில் தப்பித்துக் கொள்ளுவதுமான பறவைகள் கடைசியாக அவற்றின் இயற்கையான இருப்பிடங்களில் பறக்கக் காணப்பட்டன.


130 ஆண்டுகளாக காணாமல் போயிருந்ததாகக் கருதப்படும் பிஜி பெட்ரெல் (Fiji Petrel) என அழைக்கப்படும் கடல்பறவையினம் பசிபிக் பெருங்கடலின் பிஜியில் குவா தீவு அருகே கடலின் மீது பறக்கக் கண்டுபிடிக்கப்பட்டன.


பிஜித் தீவுகளில் காணப்படும் கருப்புசெட்டை பெட்ரெல் (Pterodroma nigripennis)

பன்னாட்டு பறவையின ஆய்வாளர்கள் இப்பறவைகளை குவாவின் தெற்கே 25 கடல்மைல் தூரத்தில் கண்டார்கள்.


மொத்தம் 8 பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டு 11 நாட்களாக அவை படம் பிடிக்கப்பட்டன. இந்த பிஜி பெட்ரெல் (Pseudobulweria macgillivrayi) எனப்படும் கடல்பறவைகள் 30 செமீ உயரமான கரும்பழுப்பு நிறமானவை.


"அதிகம் அறியப்படாத பறவையினம் ஒன்றைக் காணுவது எமக்கு இன்பமயமானது"

—ஆய்வாளர் டோனி பிம்

ஆரம்பத்தில் இவ்வினத்தின் வளர்ச்சியுறாப் பறவை ஒன்று 1855 ஆம் ஆண்டில் பிஜியின் காவு (Gau Island) தீவில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 130 ஆண்டுகளாக இவை "காணாமல்" போயிருந்தன.


அதன் பின்னர் 1984 ஆம் ஆண்டில் இதன் முழுவளர்ச்சி பெற்ற பறவை குவா தீவில் கண்டுபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது.


அன்றிலிருந்து இவற்றின் சில பறவைகள் ஆங்காங்கே கிராமவீட்டுக் கூரைகளில் காணப்பட்டதாக செய்திகள் வந்தன. அவற்றில் பல இறந்து விட்டிருந்தன.


இப்பறவையினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தினால் 192 ஆபத்துக்குள்ளாக்கப்படக்கூடிய அல்லது அரிதான இனங்களில் ஒன்றாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது.

மூலம்