ஹபிள் தொலைநோக்கியில் 1987 சுப்பர்னோவா

This is the stable version, checked on 5 அக்டோபர் 2010. Template changes await review.

திங்கள், செப்டம்பர் 6, 2010


1987 ஆம் ஆண்டில் முதன் முதலாக பூமியில் இருந்து காணக்கூடியதாக இருந்த மீயொளிர் விண்மீன் வெடிப்பின் (Supernova) படங்களை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி அனுப்பியுள்ளது.


1987 விண்மீன் வெடிப்பைச் சுற்றி அதிர்வு அலைகள், ஹபிள் தொலைநோக்கி அண்மையில் எடுத்த படம்

கடந்த ஆண்டில் ஹபிள் தொலைநோக்கி பழுது பார்க்கப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கிய பின்னர் எஸ்என் 1987ஏ (SN 1987A) என்ற இந்த விண்மீன் வெடிப்பின் முதலாவது படத்தை இப்பொழுது இத்தொலைநோக்கி அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த வெடிப்பினால் விண்ணில் எறியப்பட்ட பொருட்களின் தற்போதைய நிலை குறித்து அறியக்கூடியதாக இருக்கும் என வானியலாளர்கள் நம்புகின்றனர்.


இது குறித்த ஆய்வு சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


எமது பால்வழிக்கு அருகில் உள்ள ஒரு குறும் விண்மீன் திரளில் இந்த SN 1987A என்ற விண்மீன் வெடிப்பு 1987 பெப்ரவரி 23 ஆம் நாள் அவதானிக்கப்பட்டது. பூமியில் இருந்து 168,000 ஒளியாண்டுகள் தூரத்தில் இடம்பெற்ற இந்த வெடிப்பின் மூலம் பெரும் விண்மீன்களின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் அவற்றுக்கு என்ன நடைபெறுகின்றன என அறிவதற்கு வழி வகுத்தது. இவ்வெடிப்பு கிமு 161,000 ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒரு ஒளியாண்டு என்பது 6 திரிலியன் (10,00,00,00,00,000) மைல்கள் ஆகும்.


அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.


இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலம் முழுவதும் பரவ வல்லவை. பெரும் எண்ணிக்கையான வாயுக்களையும், தூசுகளையும் இது வெளிவிடுகிறது. கந்தகம், சிலிக்கன், இரும்பு முதலான கனிமங்களை அவை கொண்டுள்ளன.


முத்து மாலை வடிவிலான உள் வளையம் வெடிப்பு ஏற்படுவதற்கு சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னரேயே வெளியேறியிருக்கலாம் என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.


"புதிய தரவுகளின் படி வெளியேற்றப்பட்ட விண்மீன் எச்சங்களின் பொதிவு மற்றும் வேகம் ஆகியவை துல்லியமாக அளக்கக் கூடியதாக உள்ளது. அத்துடன் விண்மீன் திரளில் இவ்வெடிப்பினால் எவ்வளவு ஆற்றல் மற்றும் கனிமங்கள் வெளியேற்றப்பட்டுள்ளது என்பதையும் அறியக்கூடியதாக உள்ளது," என கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாலர் கெவின் பிரான்சு என்பவர் தெரிவித்தார்.

மூலம்