வாசிங்டனில் சினைப்பர் தாக்குதலை நடத்திய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வியாழன், நவம்பர் 12, 2009


அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யின் பல பகுதிகளிலும் 2002 ஆம் ஆண்டில் சினைப்பர் தாக்குதல்களை மேற்கொண்ட நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜோன் அலென் முகமது என்னும் இந்நபர் மனநலம் குன்றியவரென அவரது வழக்கறிஞர்கள் வாதிட்ட போதும் வேர்ஜினியா ஆளுநர் ரிம்கைன் அவரது கருணை மனுவை நிராகரித்துள்ளார்.


மரணதண்டனையை நிறுத்துவதற்கான கோரிக்கையை கடந்த திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. முன்னாள் இராணுவ வீரரான 48 வயதான முகமது மரணத்தை தோற்றுவிக்கும் ஊசி மருந்தின் மூலம் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மொத்தம் 5 நிமிடங்கள் வர நீடித்ததாகவும், முகமது உள்ளுர் நேரப்படி 21:11 மணிக்கு இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை தாக்குதலின் போது முகமதுவுக்கு உடந்தையாகவிருந்த லீ போய்ட் மல்வோ (24) வுக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மெரிலாந்து, வாஷிங்டன் மற்றும் வேர்ஜினியாவில் மூன்று கிழமைகளாக இவர்கள் நடத்திய தாக்குதல்களில் 10 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.


சினைப்பர் தாக்குதல் பகுதிகள்

மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்ததாகவும் இறுதியாக ஏதாவது கூற விரும்புகிறாரா என அவரிடம் கேட்கப்பட்டபோதும் அதற்கு அவர் இணங்கவில்லையெனவும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.


முன்னாள் படைவீரரான முகமது வளைகுடா போர் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். கடைகள், பாடசாலைகளின் வெளிப்புறம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய முகமதுவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதைப் பார்ப்பதற்கு இவரது தாக்குதல்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பலருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மூலம்

தொகு