வட கொரியாவின் ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்தது

வெள்ளி, ஏப்பிரல் 13, 2012

வட கொரியாவின் சர்ச்சைக்குரிய ராக்கெட் ஏவும் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளதை வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் வட-மேற்குப் பகுதியில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.


வட கொரியா ஏவிய ராக்கெட் ஐக்கிய நாடுகளினால் ஏற்கனவே தடை செய்யப்பட்ட நீண்டதூர ஏவுகணைத் திட்டம் எனப் பல நாடுகளால் சந்தேகிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், தமது தேசியத் தலைவர் கிம் இல்-சுங்கின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் முகமாக செயற்கைக்கோள் ஒன்றை பூமியின் சுற்றுப்பாதைக்குச் செலுத்தவே இந்த ராக்கெட் ஏவப்பட்டது என வட கொரியா தெரிவித்துள்ளது.


ஏவிய சில நிமிட நேரங்களிலேயே இந்த ராக்கெட் வெடித்து மஞ்சள் கடலில் வீழ்ந்ததாக அமெரிக்கா, யப்பான், மற்றும் தென் கொரியா ஆகியன தெரிவித்துள்ளன. தோல்விக்கான காரணங்களைத் தமது அறிவியலாளர்கள ஆராய்ந்து வருவதாக வட கொரியா தெரிவித்துள்ளது. 30 மீட்டர் நீளமான ஊனா-3 என்ற இந்த ராக்கெட் உள்ளூர் நேரம் இன்று காலை 07:39 மணிக்கு ஏவப்பட்டது.


திட்டம் தோல்வியில் முடிந்திருந்தாலும், ராக்கெட் ஏவப்பட்டதை அமெரிக்கா கடுமையாகச் சாடியிருக்கிறது. ராக்கெட் ஏவப்பட்டது வருந்தத்தக்கது என ஐநா செயலர் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.


தமது வான்பரப்பில் இந்த ராக்கெட் செல்லுமானால் அதனைச் சுட்டு வீழ்த்துவோம் என வட கொரியாவும், யப்பானும் எச்சரித்திருந்தன.


மூலம் தொகு