லித்துவேனியா தேர்தல்: எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி
திங்கள், அக்டோபர் 29, 2012
- 29 அக்டோபர் 2012: லித்துவேனியா தேர்தல்: எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி
- 30 நவம்பர் 2010: நெப்போலியனின் 1812 படையெடுப்பில் தோல்வியடைந்த படைவீரர்களின் உடல்கள் லித்துவேனியாவில் அடக்கம்
லித்துவேனியாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சிக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
75 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பிரதமர் அந்திரியசு குபீலியசின் அரசு தோல்வியுறும் நிலையில் உள்ளது. 141 இடங்கள் உள்ள நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி, சமூக சனநாயகவாதிகள், மற்றும் வலதுசாரி நீதி இயக்கம் ஆகிய கட்சிகள் இணைந்து 78 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளன. பிரதமரின் கன்சர்வேட்டிவ் கட்சி 32 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
சமூக சனநாயகக் கட்சியின் தலைவர் அல்கிர்டாசு புட்கேவிச்சசு லித்துவேனியாவின் அடுத்த தலைவராகப் பதவியேற்பார் என தொழிற்கட்சித் தலைவரும், உருசியாவில் பிறந்த கோடீசுவரருமான விக்டர் உஸ்பாஸ்கிச் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் யூரோ வலயத்தினுள் இணைதல், மிகக்குறைந்த ஊதியத் தொகையை அதிகப்படுத்தல், அதிக வருமானம் உள்ளோரிடம் அதிக வரி அறவிடுதல் போன்றவை எதிர்க்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாகும்.
மூலம்
தொகு- Lithuania election: Opposition parties heading for win, பிபிசி, அக்டோபர் 29, 2012
- Leftists win power in Lithuania, நியூஸ். கொம், அக்டோபர் 29, 2012