யூரோ வலயத்தின் 18வது உறுப்பு நாடாக லாத்வியா இணைந்தது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், சனவரி 1, 2014

பெருமளவு மக்கள் ஆதரவளிக்காத நிலையிலும், லாத்வியா 18வது உறுப்பு நாடாக யூரோ வலயத்தில் இன்று இணைந்து கொண்டது. லாத்வியா தனது லாட்சு நாணயத்தைக் கைவிட்டு யூரோ நாணயத்தை இன்று முதல் ஏற்றுக் கொள்கிறது.


லாத்வியப் பிரதமர் லெட்பிசு டொம்ப்ரோஸ்கிசு நள்ளிரவில் தன்னியக்க வங்கி இயந்திரத்தினூடே யூரோ நாணயத்தைப் பெற்று இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். பொதுமக்கள் தம்மிடம் உள்ள லாட்சு நாணயத்தை யூரோவாக மாற்றுவதற்காக வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் சேவைக்காலம் பல மணி நேரமாக நீடிக்கப்பட்டுள்ளது.


அண்மைக்காலமாக உக்ரையினில் இடம்பெற்று வரும் நிகழ்வுகள் லாத்வியா யூரோ வலயத்தில் இணைந்ததை நியாயப்படுத்தும் என லாத்விய நிதி அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.


“உருசியா எப்போதும் மாறப்போவதில்லை. எமக்கு நமது அயல்நாட்டைப் பற்றித் தெரியும். எதிர்பாராத நிகழ்வு பல முன்னர் இடம்பெற்றுள்ளன. இனியும் இடம்பெறலாம். ஐரோப்பிய ஒன்றியம் உட்பட நாடுகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவசியம்" என அவர் கூறினார்.


உக்ரையினின் பல மில்லியன் டொலர் தேசியக் கடன் அண்மையில் அந்நாட்டுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. இதனை அடுத்து உக்ரைன் உருசியாவுடனான தனது உறவுகளை உறுதியாக்கிக் கொண்டது. கன மீட்புத் தொகையாக உருசியாவிடம் இருந்து 15 பில்லியன் டொலர்களை அது பெற்றுக் கொண்டது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு