மொஸ்கோ தொடருந்து நிலையங்களில் குண்டுவெடிப்புகள், பலர் இறப்பு

திங்கள், மார்ச்சு 29, 2010

மொஸ்கோவில் இன்று காலை இரண்டு பாதாள (மெட்ரோ) தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


முதலாவது குண்டு உள்ளூர் நேரப்படி காலை 0756 மணிக்கு ரஷ்ய மத்திய புலனாய்வுக் கட்டடத்தின் கீழேயுள்ள மத்திய லுபியான்கா தொடருந்து நிலையத்தில் வெடித்தது. இதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

40 நிமிடங்களின் பின்னர் மற்றொரு மனிதக் குண்டு பார்க் குல்த்தூறி என்ற தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்றினுள் வெடித்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர்.


2004 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ரஷ்யத் தலைநகரில் இடம்பெற்ற மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதல்களுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லை.


ஆனாலும், செச்சினியாவில் தனிநாடு கோரிப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிக்ளே இத்தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என பிபிசி செய்தியாளர் அறிவிக்கிறார்.


தமது இராணுவ நடவடிக்கைகள் ரஷ்யாவின் பல நகரங்களுக்கும் விரைவில் பரவ இருக்கின்றன என்று செச்சினிய தீவிரவாரதிகளின் தலைவர் டோக்கு உமாரொவ் கடந்த பெப்ரவரியில் தெரிவித்திருந்தார்.


மாஸ்கோவின் தொடருந்து சேவையை தினமும் 5.5 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


"இரண்டு தாக்குதல்களும் பெண் தற்கொலைப் போராளிகளால் நடத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது,” என மாஸ்கோ நகர முதல்வர் யூரி லூஷ்க்கொவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


அண்மைக்காலங்களில் தீவிரவாதிகளுக்கு எதிராக இரசியப் படையினர் பல தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். கடந்த பெப்ரவரியில், இங்குசேத்தியாவில் தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதல்களில் 20 போராளிகள் கொல்லப்பட்டிருந்தனர்.


2004 பெப்ரவரியில் மாஸ்கோவின் பவிலியெத்ஸ்கயா தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம் தொகு