முன்னாள் லைபீரியத் தலைவருக்கெதிரான விசாரணையில் நவோமி காம்ப்பெல் சாட்சியம்

வெள்ளி, ஆகத்து 6, 2010

சியேரா லியோனியில் இருந்து ஏனைய செய்திகள்
சியேரா லியோனியின் அமைவிடம்

சியேரா லியோனியின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சார்ல்ஸ் டெய்லருக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளில் பிரித்தானிய மாடல் அழகி நவோமி காம்பெல் கடந்த வியாழன் அன்று சாட்சியமளித்தார்.


சூப்பர் மாடல் நவோமி காம்பெல்

1997ல் தென்னாப்பிரிக்காவில் சார்ல்ஸ் டெய்லர் கலந்துகொண்டிருந்த ஒரு விருந்தின்போது பார்க்க அழுக்காகத் தெரியும் சில கற்கள் அடங்கிய சுருக்குப் பை ஒன்று தனக்குப் பரிசாக வழங்கப்பட்டிருந்தன என்று நவோமி காம்பெல் வாக்குமூலம் அளித்துள்ளார்.


நெல்சன் மண்டேலாவின் அழைப்பின் பேரில் உலகப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டும் நோக்கிலான விருந்தில் நவோமி கலந்து கொண்டார். ”அவ்விருத்துக்குப் பின்னர் இரவில் நான் அறையில் படுத்திருந்த போது, கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். இருவர் வெளியே நின்றிருந்தனர். அவர்கள் என்னிடம் ஒரு கையைத் தந்து ‘ஒரு அன்பளிப்பு’ என்று கூறிவிட்டுச் சென்று விட்டனர்,” என்று நவோமி காம்பெல் தெரிவித்தார்.


அடுத்த நாள் காலை பையைத் திறந்து பார்த்த போது, அதனுள் “அழுக்கான சில கற்கள்” இருந்ததாகவும், உடனிருந்தவர்கள் அந்தக் கற்கள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் என்றும் அவற்றை லைபீரிய அதிபர் டெய்லர் அனுப்பியிருக்கலாம் என்றும் கூறினர். அதையே தானும் அப்படியே ஊகித்ததாக அவர் கூறினார். ஆனால், அவை சார்ல்ஸ் டெய்லர் அனுப்பியது தான் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நவோமி அக்கற்களை நெல்சன் மண்டேலாவின் சிறுவர் நிதியத்துக்காக அந்நிதியத்தின் அப்போதைய தலைவர் ஜெரமி ராட்கிளிபிடம் கையளித்ததாக அவர் தெரிவித்தார்.


சியரா லியோனில் உள்நாட்டுப் போர் நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து இரத்தக் கறை படிந்த வைரங்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஆயுதங்களை வழங்கி சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சார்ல்ஸ் டெய்லர் மறுக்கிறார்.


நெதர்லாந்தின் தி ஏக் நகரில் சியேரா லியோனியின் சிறப்பு நீதிமன்றம் ஒன்று சார்ல்ஸ் டெய்லருக்கெதிரான போர்க்குற்றங்களை விசாரித்து வருகிறது. சாட்சியம் கூற வந்த நவோமி டெய்லரைப் புகைப்படம் எடுக்கவோ அல்லது காணொளி எடுக்கவோ பத்திரிகையாளர்களுக்கு அநுமதி வழங்கப்படவில்லை.


இதற்கிடையில், காம்பெலிடம் 1997 செப்டம்பர் 26 இல் வைரங்களைப் பெற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்ட திரு ஜெரமி ராட்கிளிப் அந்த மூன்று சிறு கற்களையும் தென்னாப்பிரிக்காவின் சிறப்புக் காவல்படையினரிடம் கடந்த வியாழன் அன்று ஒப்படைத்ததாக பிபிசி அறிவித்துள்ளது. ”இக்கற்களின் மூலத்தை அறிவதற்குத் தாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்,” என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மூலம் தொகு