மீத்தேன் எரிவாயுத் திட்டம்: தமிழ்நாட்டில் விளைநிலங்கள் பாலைவனமாகும் அபாயம்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், சூன் 5, 2013

கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்ட்டா மாவட்டங்களில் காவிரிப் படுகையில் படிந்துள்ள மீத்தேன் எரிவாயுவை எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் டெல்ட்டா மாவட்ட விவசாயம் முற்றிலுமாக அழிந்துபோகும் என்ற அபாயத்தை எடுத்துரைத்து, இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி. எஸ். கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.


மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுக: காவிரி டெல்டா விவசாயிகள் ஆவேசம்

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே. பாலகிருஷ்ணன் எம்எல்ஏ கூறியதாவது:- மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியின் பேரில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிடெட் சோதனை அடிப்படையில் அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது. இப்பணியில் ஈடுபடும்போது முதலாவதாக நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டு, அதன்பிறகே மீத்தேன் எரிவாயுவை சேமிக்க வேண்டும். ஏற்கனவே காவிரி டெல்ட்டா மாவட்டங்கள் சாகுபடிப் பணிகளில் மிகுந்த பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. நிலத்தடி நீரும் குறைந்து வருகிறது. இந்த மோசமான சூழ்நிலையில் மேற்கண்ட தனியார் நிறுவனம் நிலத்தடி நீரை வெளியேற்றி மீத்தேன் எடுக்கும் பணியில் ஈடுபட்டால் விவசாய விளைநிலங்கள் முற்றிலுமாக அழிந்து போகும். மேலும் கடல்நீர் உள்ளே புகுந்து இருக்கின்ற தண்ணீரும் உப்புநீராக மாறிவிடும் ஆபத்தும் உள்ளது. வளிமண்டலம் பாதிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் ஆபத்தும் இதில் உள்ளது. ஏற்கனவே கெயில் நிறுவனம் விவசாய விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட போது தமிழக அரசு அதற்கு தடை விதித்தது. அப்போது தமிழக முதலமைச்சர் மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர மக்களை அழித்துவிட்டு திட்டங்களை கொண்டுவரமுடியாது என்று அறிவித்திருந்தார். இதே கருத்தை தற்போது மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திலும் தமிழக அரசு உணர்த்தி, திட்டத்தை உடனடியாகக் கைவிட நடுவண் அரசிடம் வலியுறுத்த வேண்டும். மீத்தேன் எரிவாயு எடுக்கும் இந்தப் பணியை உடனடியாக தனியார் நிறுவனம் கைவிடாவிட்டால் விவசாயிகளை அணி திரட்டி நேரடியாக களத்தில் இறங்கி இந்த திட்டப்பணிகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.


ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள், இவர்களுடன் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சை பனகல் கட்டிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு, திருவிடைமருதூர் உள்ளிட்ட 12 கிராமங்களிலும் மீத்தேன் எடுக்கும் நிறுவனம் முதல் கட்ட வேலையைத் துவங்கியுள்ளது. மேலும் 254 கிராமங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செய லாளர் சாமி.நடராஜன் தலைமை தாங்கினார்.


மூலம்

தொகு