மிகவும் பழமையான விண்மீன்திரள் ஒன்றை ஹபிள் தொலைநோக்கி கண்டுபிடித்தது

வியாழன், சனவரி 27, 2011

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பழமையானதெனக் கருதப்படும் விண்மீன்பேரடை (Galaxy) ஒன்றை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.


மிகப் பழமையான பேரடை UDFj-39546284

இந்த நாள்மீன்பேரடை 13 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் பெரு வெடிப்பு (Big-Bang) நிகழ்ந்து 480 மில்லியன் ஆண்டு காலம் இது இருந்திருக்கிறது என வானியலாளர்கள் கணித்திருக்கின்றனர்.


நாசாவின் ஹபிள் தொலைநோக்கியில் அண்மையில் இணைக்கப்பட்ட அகண்ட புலப் படக்கருவி மூலம் அவதானிக்கப்பட்ட இந்த விண்மீன்திரளின் படம் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பேரடைக்கு UDFj-39546284 எனப் பெயரிடப்பட்டுள்ளது.


”அண்டவெளி நேரத்தில் தோன்றிய விண்மீன் நகரங்கள் என அழைக்கப்படும் இந்தப் பேரடைகளை நாம் இப்போது காண்கிறோம்,” என நெதர்லாந்தைச் சேர்ந்த லைடன் அவதானநிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் பவென்ஸ் கருத்துத் தெரிவித்தார்.


ஒப்பீட்டளவில் மிகச் சிறிய காலப்பகுதியில் பேரடைகளின் எண்ணிக்கை வளர்ந்து வந்துள்ளமை அறியப்பட்டுள்ளது. பெரு வெடிப்புக்குப் பின்னர் 500 மில்லியன் ஆண்டுகளாக ஒரு பேரடையே இருந்துள்ளது. அதற்குப் பின்னர் 150 மில்லியன் ஆண்டுகளில் 10 பேரடைகள் உருவாயின. இது 100 மில்லியன் ஆண்டுகளில் இரட்டிப்பாகியது.


பெரு வெடிப்புக்குச் சற்றுப் பின்னரான விண்மீன்கள், மற்றும் பேரடைகள் பற்றிய அறிவின் மூலம் பெருவெடிப்பிற்குப் பின்னர் முதல் பில்லியன் ஆண்டுகளில் இருந்த 'மீள் அயனாக்கல்' (reionization) என்ற காலப்பகுதியப் பற்றி அறியக்கூடியதாக உள்ளது என அறிவியலாளரக்ள் தெரிவிக்கின்றனர். இக்காலப்பகுதியில், விண்மீன்களுக்கிடையேயான வெளியில் உள்ள நடுநிலை ஐதரசன் அணுக்கள் புரோத்தன்களாகவும், இலத்திரன்களாகவும் பிளவடைந்து இந்த அண்டத்தை புற ஊதாக் கதிர்களுக்கு வழிவிட்டன.


மூலம் தொகு