மாஸ்கோவில் விமானம் தரையில் மோதி நொறுங்கியது, நால்வர் உயிரிழப்பு

ஞாயிறு, திசம்பர் 30, 2012

உருசியப் பயணிகள் விமானம் ஒன்று மாஸ்கோ விமான நிலையத்தில் நேற்றுத் தரையிறங்க எத்தனித்த போது ஓடுபாதையை விட்டு விலகி அருகில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் மோதி நொறுங்கியதில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்.


வுனூக்கோவா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ரெட் விங்க்ஸ் துப்போலெவ்-204 என்ற பயணிகள் விமானத்தில் எட்டு முதல் 12 விமானப் பணியாளர்கள் மட்டுமே பயணித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றனர். விமானம் பல துண்டுகளாக சிதறியது. செக் குடியரசில் இருந்து இவ்விமானம் புறப்பட்டிருந்தது.


இறந்தவர்களில் இருவர் விமான ஓட்டிகள் ஆவர். நால்வர் படுகாயமடைந்தனர். விபத்துக்கான காரணத்தைக் கண்டறியுமாறு உருசியப் பிரதமர் திமீத்ரி மெத்வேதெவ் கட்டளையிட்டுள்ளார். விமான விபத்துக்கு பாதகமான காலநிலை, தொழில்நுட்பக் கோளாறு அல்லது விமான ஓட்டிகளின் தவறு ஆகியவற்றில் ஒன்றே காரணமாயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


துப்போலெவ்-204 புதிய, நவீனகரமான பயணிகள் ஜெட் விமானம் ஆகும், இவை 200 பேர் வரையில் பயணம் செய்யக்கூடியவை ஆகும்.


மூலம் தொகு