மாவீரர் நாள் 2012: யாழ் பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்

புதன், நவம்பர் 28, 2012

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏழு மாணவர்கள் இன்று படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்து யாழ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.


இன்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற இந்த மோதல் நிலையை அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.


நேற்று மாலை 06:05 மணிக்கு வீடுகள், மற்றும் கோயில்களில் தீபங்கள் ஏற்றியும், மணியோசை எழுப்பியும் தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூர்ந்தனர். பல இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக்கழகத்துக்குள் நேற்று மாலை புகுந்த இராணுவத்தினரும் காவல்துறையினரும் மாணவர்களைத் தாக்க முயற்சித்ததில் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. இந்த கெடுபிடிகளுக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு மாணவர் நேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினர் பிரவேசித்ததை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று சென்று நிலைமைகளை ஆராய்ந்தபோது அவர் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. உதயன் பத்திரிகையின் ஆசிரியர் டி.பிரேமானந்த் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவத்தினர் நேற்று உள்நுழைந்து மாணவர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சுமத்தி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே ஏழு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.


வன்னிப் பகுதியிலும் மாவீரர் நாள் நினைவு கூரப்பட்டது.


மூலம்

தொகு