மாலி எல்லையில் போராளிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் மவுரித்தேனியா இறங்கியது

சனி, செப்டெம்பர் 18, 2010

அல்-கைடாவுடன் தொடர்புள்ள இசுலாமியத் தீவிரவாதிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை மவுரித்தேனியா மாலியுடனான எல்லைப் பகுதியில் ஆரம்பித்துள்ளதாக இரு நாட்டு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


சண்டை தற்போது எல்லையைத் தாண்டி மாலியினுள்ளும் இடம்பெறுவதாக இராணுவத்தினரை ஆதாரம் காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


நைஜரில் கடந்த புதன்கிழமையன்று ஐந்து பிரெஞ்சுக் குடிமக்கள் கடத்தப்பட்டதற்கு இசுலாமிய மாக்ரெப் என்ற அல்-கைடா சார்பு அமைப்பே காரணம் என பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. வட-மேற்கு ஆப்பிரிக்காவில் இவ்வமைப்பு பல தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி வந்திருக்கிறது. இவ்வமைப்பு 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.


முண்ணதாக பல தடவைகள் இவ்வமைப்பு பிரெஞ்சு, மற்றும் ஐரோப்பியர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தது. இவர்களைப் பின்னர் மாலியில் உள்ள பாலைநிலங்களுக்கு கொண்டு சென்றது.


இவ்வமைப்பு கடந்த சூலை மாதத்தில் தாம் பிடித்து வைத்திருந்த மிச்செல் ஜெர்மானியூ என்ற 78 வயதுப் பிரெஞ்சு ஒருவரைக் கொலை செய்தது. கடந்த ஆண்டில் எட்வின் டயர் என்ற பிரித்தானியப் பணயக் கைதியைச் சுட்டுக் கொன்றது.

மூலம்

தொகு