மலையக சிறுமிகளின் சடலங்களை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய், ஆகத்து 25, 2009, கொழும்பு:
தற்கொலை எனத் தீர்மானிக்கப்பட்டு அண்மையில் புதைக்கப்பட்ட இலங்கை, மலையகத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் சிறுமிகளின் சடலங்களை தோண்டியெடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனைகளை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஸ்கெலிய பகுதியில் புதைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு சிறுமிகளின் சடலங்களும் தோண்டியெடுக்கப்பட்டு கண்டி பிரதம சட்ட அதிகாரியின் மூலமாக பிரத்தியேகமாக பிரேதப் பரிசோதனையை நடத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் நிஷ்ஷங்க ஹப்பு ஆரச்சி கருவாத்தோட்டப் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தைப் பகுதியில் சடலங்களாக மீட்கப்பட்ட தமிழ்ச் சிறுமிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திடம் இதற்கு முன்னர் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மஸ்கெலியா லக்சபான தோட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன் சுமதி மதுரைவீரன் ஜீவ ராணி ஆகிய சிறுமிகளின் மரணங்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தனர்.
இந்த மனுமீதான விசாரணைக்காக மலையகத்தைச் சேர்ந்த பத்து சட்டத்தரணிகள் கட்டணம் எதுவுமி ன்றி நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
கொழும்பு கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு வீடுகளில் இந்த இரண்டு சிறுமிகளும் பணிபுரிந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15 இல் பெளத்தாலோக மாவத்தை கழிவு நீரோடைப் பகுதியிலிரு ந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.சிறுமிகளின் மரணங்கள் தற்கொலை என பொலிசாரின் விசாரனையை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றம் முன்னர் தீர்மானம் வழங்கியிருந்தது.
எனினும் மரணங்கள் தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்கள் காரணமாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைவாக சடலங்கள் குறித்த புதிய விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் 11ம் திகதி நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கருவாத்தோட்டப் பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய நாளை (27) வியாழக்கிழமை காலை சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு,மேலதிக பரிசோதனைக்காக கண்டி சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சடலங்கள் தோண்டியெடுக்கப்படும்போது ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதவான் பிரசன்னமாகியிருப்பார்.