மட்டக்களப்பு காவல் நிலைய வெடிப்புச் சம்பவத்தில் 60 பேர் உயிரிழப்பு

வெள்ளி, செப்டெம்பர் 17, 2010

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று இடம்பெற்ற வெடி விபத்து ஒன்றில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவரில் பெரும்பான்மையானோர் காவல்துறையினராவார். கொல்லப்பட்டவர்களில் இரண்டு சீன ஒப்பந்தக்காரர்களும், மற்றும் பொதுமக்களும் அடங்குவர். 40 பேர் வரையில் காயமடைந்தனர்.


மட்டக்களப்பு கரடியனாறு காவல்நிலையத்தில் வெடிபொருட்கள் ஏறிய பாரவுந்து ஒன்று தற்செயலாக வெடித்ததனாலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்ததாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.


இந்த வெடிபொருட்கள் காவல்நிலையத்தில் வைத்து சாலைப் போக்குவரத்து நிர்மாணப் பணிக்காக சீன ஒப்பந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்ட போதே தற்செயலாக இவ்வெடிப்பு நிகந்ததாக மேஜர் ஜெனரல் உபய மெடவல தெரிவித்தார். இந்த வெடிபொருட்கள் வாகனங்கள் பலவற்றில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு வாகனத்தில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து அது ஏனைய வாகனங்களுக்கும் பரவியது. அருகிலுள்ள வைத்தியசாலை மற்றும் கமநல சேவைகள் திணைக்கள கட்டிடமும் சேதமடைந்துள்ளன.


இவ்வெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை எனினும் “சதி வேலை எதுவும் இடம்பெற்றதாக நாம் சந்தேகிக்கவில்லை," என உபய மெடவெல தெரிவித்தார். கரடியனாறு காவல்நிலையம் பலத்த சேதத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பிந்திக் கிடைத்த செய்திகளின் படி, இறந்தோர் எண்ணிக்கை 25 எனக் காவல்துறையினர் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கூடியுள்ள காயமடைந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுவதாகவும் காயமடைந்தோரைப் பார்வையிட பெருந்திரளான மக்கள் வைத்தியாசாலையில் கூடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையில் சாலை மேம்பாட்டுத் திட்டங்களிலும், இரண்டு துறைமுகங்கள் அமைக்கும் பணியிலும் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

மூலம் தொகு