கிழக்குப் பல்கலைக்கழத்தில் 'போருக்குப் பின் அறிவியலும் தொழில்நுட்பமும்' பன்னாட்டு மாநாடு

சனி, செப்டெம்பர் 21, 2013

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

யுத்தத்துக்குப் பின்னரான மீள்ச்சியில் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் தலைப்பில் இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு இம்மாதம் 12, 13ம் திகதிகளில் மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா மண்டபத்தில் உபவேந்தர் கலாநிதி கிட்னன் கோபிந்தராஜா தலைமையில் நடைபெற்றது.


இம்மாநாட்டில், பிரதம விருந்தினராகவும், பிரதம பேச்சாளராகவும் பங்காளதேசின் டாக்கா பல்கலைக்கழக அரங்கியல்துறை பேராசிரியர் ஐசயத் ஜமில் அகமட் கலந்து கொண்டு உரையாற்றினார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக தென்னாசியக் கற்கைகள் துறை இணைப்பாராசிரியர் கலாநிதி ராகுல் முகர்ஜியும் கலந்து கொண்டார். இவர்களுடன், கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே. மகேசன், ரஜரட்டை பல்கலைக்கழக வேளாண்மைப் பீடப் பேராசிரியர் அருணி வீரசிங்க, கொழும்புப் பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளர் கலாநிதி ரி. சர்வேஸ்வரன் உள்ளிட்டோரும் கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலிருந்தும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில், பல்கலைக்கழக நுண்கலைத் துறையினரின் கலாசார வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைவடிவமான களரித் தோரணம் சிறிய வடிவில் அலங்கார நினைவுப் பரிசாக வடிவமைக்கப்பட்டு அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வினையடுத்து ஆய்வுச் சுவரொட்டிக் காட்சிப்படுத்தல்கள் நடைபெற்றன. இம்மாநாட்டில், இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலிருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. வாய்மொழி மூல மற்றும் காட்சிப்படுத்தல்களுக்காக 61 கட்டுரைகள் பன்னாட்டு, தேசிய துறைசார் நிபுணர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.


முதல் நாள் நிகழ்வின் இறுதியில், மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுச் செயலாளரும், மூத்த விரிவுரையாளருமான திருமதி கிருஸ்ணாள் திருமார்பன் நன்றியுரை நிகழ்த்தினார்.


6 அமர்வுகளாக நடைபெற்ற இவ் மாநாட்டில் 12ஆம் திகதி மாலை மாநாட்டு இரா விருந்தும் கலாசாசர நிகழ்வுகள் மட்டக்களப்பு நகரிலுள்ள பாடுமீன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.


தேசிய அளவில், 2006ஆம் ஆய்வு மாநாடு முதல் தடவையாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டிருந்தது. இம்முறை இவ் மாநாடு சர்வதேச அளவில் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மாநாட்டில் தலைமையுரையாற்றிய கிழக்கு பல்லைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக சர்வதேச ரீதியில் தமது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆராய்ச்சிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்கள் தற்போது ஏற்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.


மாநாட்டின் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்ட பங்காளதேசின் டாக்கா பல்கலைக்கழக அரங்கியல்துறை பேராசிரியர் ஐசயத் ஜமில் அகமது, "இலங்கையில் இருக்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம்களிடையே உள்ள தேசியம் தொடர்பான பார்வைக்கும் வேறு நாட்டவர்களிடையே இலங்கை தொடர்பில் உள்ள தேசியம் தொடர்பான பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில், ஒன்றிணைவுகளுக்கான சூழ்நிலையை உருவாக்கும் வல்லமை கலைகளுக்குண்டு," எனத் தெரிவித்தார்.


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையும், விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தினரும் இணைந்து ஏற்பாடு செய்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது சர்வதேச மாநாட்டிற்கான கலாசார நிகழ்வுகள் மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்றன. இதில், கர்நாடக இசைக்கச்சேரிகளும், பாரம்பரிய கூத்துக்களும் இடம்பெற்றிருந்தன.


மூலம் தொகு