போராளிகளின் போர் நிறுத்த அறிவிப்பை ஏமன் அரசு நிராகரித்தது

திங்கள், பெப்ரவரி 1, 2010


ஏமனின் வடக்கில் இருக்கும் இரு பிராந்தியங்களில் போராளிகள் அறிவித்த போர் நிறுத்தத்தை ஏமனின் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் சவுதி அரேபியா மீதும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என ஏமன் அரசு வலியுறுத்தியுள்ளது. ஏமன் இராணுவம் தங்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டால், தாங்கள் அரசாங்கத்தின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.


போராளிகளில் போர் நிறுத்த அறிவிப்பு ஏற்பட்டு ஒரு சில மணி நேரத்தில் அங்கு மோதல் வெடித்தது. இம்மோதலில் இருபது சியா கிளர்ச்சியாளர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஹவுத்தி என்று அழைக்கப்படும் இந்த கிளர்ச்சியாளர்கள் தங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் எவ்விதமான உபயோகமான அரசியல் தீர்வையும் பெற முடியாது என்று கூறியிருக்கின்றனர்.


கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் 250,000 யேமனியர்கள் அங்கு இடம்பெற்றுவரும் சண்டையை அடுத்து இடம்பெயர்ந்துள்ளனர் என ஐநாவின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சிறுபான்மை சியா முஸ்லிம் குழுவைச் சேர்ந்த ஹவுத்தி போராளிகள் 2004 ஆம் ஆண்டில் இருந்து ஏமனிய அரசுடன் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலம்