ஏமனில் அரசு அறிவித்த போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படவில்லை
சனி, செப்டம்பர் 19, 2009, ஏமன்:
ஏமன் நாட்டில் அரசாங்கப் படையினர் சியா கிளர்ச்சிக்காரர்கள் இடையில் கடந்த ஐந்து வாரங்களாக சண்டைகள் நடந்துவரும் நிலையில், நிபந்தனைகளுடன் கூடிய போர்நிறுத்தம் செய்வதாக அரசாங்கம் ஷியா கிளர்ச்சிக்காரர்களிடம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அங்கு போர் தொடர்வதாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நோன்புப் பெருநாள் பண்டிகையை ஒட்டி இன்று முதல் சண்டைகள் இடைநிறுத்தப்படுவதாக அரசாங்கம் கூறியுள்ளது.
தாங்கள் கைப்பற்றியுள்ள நிலப்பகுதிகளை கைவிடுதல், பிடித்துவைத்துள்ள படையினரை விடுவித்தல், மத்திய அரசின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற நிபந்தனைகளை கிளர்ச்சிக்காரர்கள் ஏற்பார்களேயானால் இந்த போர்நிறுத்தம் நிரந்தரமாகும் என்று அரசு கூறியுள்ளது.
இந்த நிபந்தனைகள் பற்றிப் பரிசீலிப்பதாக கிளர்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். ஆனால் இதுபோன்ற நிபந்தனைகளை கடந்த காலங்களில் அவர்கள் நிராகரித்திருந்தனர் என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கு இடம்பெற்றுவரும் கிளர்ச்சிகளினால் 150,000 பொதுமக்கள் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.
மூலம்
தொகு- Yemen ceasefire 'not respected', பிபிசி