போப்பாண்டவரைக் கொல்ல முயன்றவர் 30 ஆண்டுகளின் பின்னர் விடுதலை

திங்கள், சனவரி 18, 2010


1981 ஆம் ஆண்டில் போப்பாண்டவர் அருளப்பர் சின்னப்பரைக் கொலை செய்ய முயன்றதாகக் கைது செய்யப்பட்ட நபர் இன்று துருக்கியில் விடுதலை செய்யப்பட்டார்.


மெகமத் அலி ஆக்கா என்ற நபர் போப்பாண்டவரைக் கொலை செய்ய முயன்ற குற்றசாட்டுகளுக்காக இத்தாலியச் சிறையில் 19 ஆண்டுகளும், முன்னராக செய்தி ஆசிரியர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக துருக்கிய சிறையில் 10 ஆண்டுகளும் சிறை வைக்கப்பட்டிருந்தார். இவர் அங்காரா அருகேயுள்ள சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.


போப்பாண்டவரைக் கொலை செய்வதற்கு அவரைத் தூண்டியது எது என்பது புரியாத இரகசியமாக இருந்தாலும், இவ்விஷயத்தில் தான் தனித்தே செயல்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.


சிறையில் இருந்த இவரை 1983-ம் ஆண்டு போப்பாண்டவர் அருளப்பர் சின்னப்பர் நேரில் சென்று பார்த்தார். அப்போது, தன்னை கொலை செய்ய முயன்ற இவரின் தவறுகளை மறந்துவிட்டதாக தெரிவித்தார்.


இவர் ஒரு மன நோயாளியா என்பது குறித்தும் இப்போது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. அண்மையில் தான் ஒரு இறைதூதர் என்று பல முறை கூறியிருக்கிறார்.


இவர் சிரையில் இருந்து வெளியேற முன்னர் வெளியிட்ட அறிக்கையில், "இந்த உலகம் ஒரு முடிவுக்கு வரவிருக்கிறது. இந்த நூற்றாண்டில் இவ்வுலகம் முழுதும் அழிந்து விடும். அனைவரும் இறந்து விடுவர்...நான் ஒரு நித்திய கிறிஸ்து", என்று கூறியிருக்கிறார்.


ஆக்கா இராணுவத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவார் என துருக்கிய செய்திகள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையே இவரது சொந்த வாழ்க்கையை புத்தகமாகவும், திரைப்படமாகவும் தயாரிக்க பல வெளிநாட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

மூலம்