துருக்கியின் இசுத்தான்புல் கேளிக்கை விடுதியில் நடந்த தாக்குதலில் 39 பேர் பலி

ஞாயிறு, சனவரி 1, 2017

இசுத்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கையகம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் 16 இசுரேல், துனிசியா, லெபனான், சோர்டான், சௌதி அரேபியா, இந்தியா, பிரான்சு, பெல்சியம் ஆகிய வெளிநாட்டினர் உள்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தாக்குதல் நடந்த சமயம் இரவு விடுதியில் 700 பேர் இருந்தனர். தாக்குதல்தாரி விடுதி காவலாளியையும், காவல் துறையை சேர்ந்த ஒருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு விடுதியில் நுழைந்துள்ளார்.


பலியானவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்; அந்தத் தாக்குதலுக்கு பரவலாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இரவு விடுதியிலிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தனி நபரை தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் இறந்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுச்மா சுவராச் கீச்சு மூலம் தெரிவித்துள்ளார்.


உள்ளூர் நேரப்படி 01.30 மணிக்கு ரீய்னா இரவு கேளிக்கையகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை இன்னும் காவல் துறையினர் தேடி வருவதாகவும் மேலும், 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சர் சுலேமான் சொய்லு தெரிவித்துள்ளார்.


துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், இந்த தாக்குதல் குழப்பத்தை உருவாக்குவதற்கான முயற்சி என்று தெரிவித்துள்ளார். இது கற்பனை செய்ய முடியாத ஒரு இழிந்த குற்றம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.


இது ஒரு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் என்று அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளது. உலகை அச்சம் மற்றும் அதிர்ச்சி என்ற நிழலால் சூழுகின்ற இம்மாதிரியான வன்முறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும் என்று போப் ஃபிரான்சிசு வலியுறுத்தியுள்ளார்.


மூலம்

தொகு