பெருமளவு கரிமச் செறிவுடன் கூடிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, திசம்பர் 10, 2010

பெருமளவு கரிமம் செறிந்துள்ள கோள் ஒன்றை அமெரிக்க-பிரித்தானிய அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


வாஸ்ப்-12 சூரியன் வாஸ்ப்-12பி கோளை விழுங்கும் காட்சி, ஓவியரின் மனப்பதிவு

வைரம் அல்லது கிரபைட்டுகளுடன் கூடிய பாறைகள் அடங்கிய கோள்கள் அண்டத்தில் காணப்படலாம் என்ற முன்னைய கண்டுபிடிப்புகள் இதனை உறுதி செய்கின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவர்களது ஆய்வு நேச்சர் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. கோள்கள் எவ்வாறு உருவாகின என்பது குறித்த புதிய கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டுள்ளன.


"வைரங்களைக் கொண்ட மலைகளும் நிலப்பகுதிகளும் அங்கு காணப்படலாம்," என இவ்வாய்வுக்குத் தலைமை வகித்த நிக்கு மதுசுதன் தெரிவித்தார். நிக்கு மதுசுதன் நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வானியற்பியல் ஆய்வாளர் ஆவார்.


வாஸ்ப் 12-பி {Wasp-12B) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தக் கோள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோள்களில் ஒக்சிசனை விட அதிகம் கரிமத்தைக் கொண்டிருக்கும் முதலாவது கோள் எனக் கூறப்படுகிறது. வியாழன் கோளைப் போன்று வாயுக்களைப் பெருமளவு கொண்டுள்ளது. அத்துடன் ஐதரசன் வளிமத்தைக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது.


இக்கோள் 1,200 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. 2300 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் கொண்டதாகவும் இருக்ககூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கொண்டு அதில் இருந்து வெளிவரும் வெப்பக் கதிர்வீச்சு ஆராயப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளைக் கொண்டு இக்கோளின் பொதிவை ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.


முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இக்கோள் அவதானிக்கப்பட்டது. அது குறித்த ஆய்வுகளை நாசா விண்வெளி ஆய்வு மையம் ஆராய்ந்து வருகிறது. இக்கோளை அதன் தாய்ச் சூரியன் வாஸ்ப்-12 படிப்படியாக விழுங்கி வருவதாகவும், இதன் வாழ்வுக்காலம் இன்னும் 10 மில்லியன் ஆண்டுகள் வரை எனவும் நாசா கூறியுள்ளது.


இன்று வரை கிட்டத்தட்ட 500 புறக்கோள்களை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு