பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
வியாழன், பெப்பிரவரி 23, 2017
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 15 திசம்பர் 2016: கலிலியோ செயற்கைகோள் செயல்பாட்டுக்கு வந்தது
பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் ஓர் விண்மீனை சுற்றி வருவதை நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அக்கோள்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஏழு கோள்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது.
பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் விண்மீன் தான் டிராபிசுட்-1. நிறை குறைந்த இந்த விண்மீனை இந்த ஏழு கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன.
இந்த கோள்கள் நாசாவின் இசுபிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் உதவியோடும் மற்றும் பல நிலம் சார்ந்த ஆய்வுகளின்படியும் கண்டறியப்பட்டுள்ளதாக நேச்சர் என்ற இதழில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான பெல்சியம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிக்கெல் கில்லான் கூறுகையில், கோள்கள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், நட்சத்திரத்தோடும் மிக நெருக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த விண்மீன் மிகவும் சிறியது மற்றும் குளிர்ச்சியானது என குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக கிரகங்களும் மிதமான தட்ப வெட்ப நிலையில் இருக்கும் என்றும், திரவ தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், மேற்பரப்பில் உயிரினங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆய்வின் துணை ஆசிரியரான ஐக்கிய ராச்சியத்தின் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமோரி ட்ரியாட் கூறுகையில், தங்கள் குழு மிதமான என்பதற்கு விளக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது உயிர்களின் வாழ்வியல் குறித்த கருத்துக்களை விரிவுபடுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.
டிராபிசுட்-1 விண்மீன் வெளிச்சம் குறைவானதும் சிறியதும் ஆகும் வெளிச்சம் மிகுந்த விண்மீன்களை ஆராய்வதை விட வெளிச்சம் குறைவான விண்மீனை ஆராய்வது எளிது. TRAPPIST-1 என்று சிலியில் பெயர் வைக்கப்பட்டது.
மூலம்
தொகு- Star's seven Earth-sized worlds set record பிபிசி 22 பிப்ரவரி 2017
- NASA Telescope Reveals Largest Batch of Earth-Size, Habitable-Zone Planets Around Single Star நாசா 22 பிப்ரவரி 2017
- Exoplanet discovery: Five facts you need to know about Nasa's new solar system இண்டிபென்டெண்ட் 23 பிப்ரவரி 2017