பூமிக்கு மீண்டும் திரும்பக்கூடிய உயிரியல் செயற்கைக்கோளை உருசியா ஏவியது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, ஏப்பிரல் 21, 2013

உயிரினங்கள் மீது நீண்ட விண்வெளிப் பயணத்தின் விளைவுகளை ஆராய்வதற்காக "பயான்-எம்1" (Bion-M1) என்ற உயிரியல் செயற்கைக்கோள் (செய்மதி) ஒன்றை உருசியா ஏவியுள்ளது. கசக்ஸ்தானின் பைக்கனூர் ஏவுதளத்திலிருந்து சோயுஸ்-2.1ஏ ஏவுகலம்-ஏந்தி மூலம் இந்த செய்மதி ஏவப்பட்டது.


பையான் செயற்கைக்கோள்

இந்த செய்மதியில் 45 எலிகள், 8 மங்கோலிய கேர்பில்கள் (கொறிணிகள்), 15 பல்லிகள், நத்தைகள், மீன் முட்டைகள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட தாவரங்களும் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளன.


இச்செய்மதி மீளவும் பூமிக்குத் திரும்பக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான செய்மதிகள் ஏவப்படுவது இதுவே முதற் தடவையாகும். 575 கி.மீ உயர கோள்பாதையில் 30 நாட்கள் பயணத்தை முடித்து இந்த செய்மதி இவ்வாண்டு மே 18 இல் பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் இருக்கும் காலத்தில் மரபியல், உடலியல் மற்றும் உயிரியல் சோதனைகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வர். இந்த சோதனையின் முடிவுகள் எதிர்காலத்தில் செவ்வாய்க் கோளுக்கான மனித விண்வெளிப் பயணத்திற்கு பயன்படும்.


இதனுடன் இந்த ஏவுகலம் செருமனி, ஐக்கிய அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகளின் 6 தெரிவிப்பு செய்மதிகளையும் விண்ணில் சேர்த்தது.


15 ஆண்டுகளுக்குப் பிறகு உருசியா, உயிரியல் செய்மதி ஏவுதலை மீண்டும் தொடங்கியுள்ளது.


மூலம்

தொகு