புரோகிரஸ் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணையும் முயற்சி தோல்வி

சனி, சூலை 3, 2010


ரஷ்யாவின் ஆளில்லா புரோகிரஸ் சரக்கு விண்கலம் தொழிநுட்பச் சிக்கலால் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைவதில் தோல்வி கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2006 இல் ஏவப்பட்ட புரோகிரஸ் M-55 விண்கலம்.
பன்னாட்டு விண்வெளி நிலையம்

இணைவதற்குத் தேவையான வானொலித் தொடர்பில் தவறு ஏற்பட்டுள்ளது என நாசா தெரிவித்தது. விண்வெளி நிலையத்துகுத் தேவையான உணவு, எரிபொருள், மற்றும் வேறு பொருட்களை இது ஏற்றிச் சென்றுள்ளது. ஆனாலும் விண்வெளி நிலையத்தில் போதுமானளவு பொருட்கள் சேமிப்பில் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது..


இந்த இணைப்புத் தவறு காரணமாக விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் ஆறு விண்வெளி வீரர்களுக்கோ அல்லது விண்வெளி நிலையத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என நாசா தெரிவித்துள்ளது.


சுற்றுவட்டத்தைப் பொருத்து, இன்னும் 48 மணி நேரத்தில் மீண்டும் இணைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.


முதலாவது இணைவு முயற்சி நேற்று 1658 GMT மணிக்கு மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால் 28 நிமிடங்களுக்கு முனன்ரே வானொலித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனை அடுத்து புரோகிரஸ் விண்வெளி நிலையத்தில் இருந்து 3 கிமீ தூரத்தில் அதனை பாதுகாப்பாகக் கடப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. இந்த இடைத்தூரம் தற்போது அடிகருத்து வருகின்றது என நாசா தெரிவித்தது.


பல ஆண்டுகளாக சரக்குகளை ஏற்றிச் செல்லும் சேவையில் ஈடுபட்டிருந்த புரோகிரஸ் விண்கலங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்றும் இப்படியான தவறுகள் நிகழ்வது மிகவும் அரிது என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


பன்னாட்டு விண்வெளி நிலையம் ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கூட்டுத் திட்டமாகும். தற்போது அங்கு மூன்று இரசியர்களும் 3 அமெரிக்கர்களும் தங்கியிருக்கின்றனர்.

மூலம் தொகு