புரூண்டி மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் உயிரிழப்பு
புதன், செப்டெம்பர் 21, 2011
- 21 செப்டெம்பர் 2011: புரூண்டி மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் உயிரிழப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான புரூண்டியில் மதுபான விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் கொல்லப்பட்டனர். கொங்கோவைச் சேர்ந்த தீவிரவாதக் கும்பலொன்றே இத் திடீர் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினமிரவு தலைநகரான புசும்புராவில் உள்ள மதுபான விடுதியொன்றினுள் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு தள்ளியது. இதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இது குறித்து சம்பவத்தில் உயிர்பிழைத்த ஒருவர் கூறுகையில், மதுபான விடுதிக்குள் ராணுவ உடை அணிந்த 12இற்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று நுழைந்து விடுதியில் இருந்தவர்களை கீழே படுக்க வைத்து அவர்கள் மீது 20 நிமிடங்கள் சரமாரியாக சுட்டனர்” என்றார்.
இக் கொலைவெறித் தாக்குதல் குறித்து அறிந்த அந்நாட்டு அதிபர் பீர் குருன்சிசா தனது நியூயார்க் பயணத்தை ரத்து செய்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டுமுள்ளார்.
மத்திய ஆப்பிரிக்காவின் சிறிய நாடான புரூண்டியில், கடந்த 12 ஆண்டுகளாக சிறுபான்மையின தூத்சி இனத்தவரான இராணுவத்தினருக்கும், ஹூட்டு போராளிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் இதுவரை 3 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். புரூண்டியின் கடைசி போராளிக் குழு 2009 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக தனது ஆயுதங்களைக் கையளித்தது. ஆனாலும் அங்கு தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.
2005 ஆம் ஆண்டில் இனப்பிரச்சினை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. முன்னாள் போராளித் தலைவர் ந்குருன்சீசா என்பவர் அரசுத் தலைவராகத் தேர்ந்தஎடுக்கப்பட்டார், ஆனாலும், FNL எனப்படும் தேசிய விடுதலைப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல்களை அடுத்து இடம்பெற்ற பெரும் வன்முறையாக மதுபான விடுதிக் கொலைகள் கருதப்படுகின்றன. முன்னாள் போராளித் தலைவர் அகத்தோன் ருவாசா அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கி நாட்டில் இருந்து வெளியேறினார்.
மூலம்
தொகு- Burundi bar attack leaves many dead in Gatumba, பிபிசி, செப்டம்பர் 19, 2011
- புரூண்டி மதுபான பாரில் மர்மக்கும்பலின் துப்பாக்கி சூட்டில் 36 பேர் பலி, தட்ஸ் தமிழ், செப்டம்பர் 20, 2011
- மதுபான விடுதியில் 36 பேர் சுட்டுக்கொலை, வெப்துன்யா, செப்டம்பர் 21, 2011